--- --:--:-- --

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி..!

1

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி பதவி விலகியதைத் தொடர்ந்து மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநரான, தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களமிறக்கப்பட்டார்.

 

நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பா.ஜ. எம்.பி. கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் வாக்களித்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

 

மொத்தம் 781 வாக்குகள் உள்ள நிலையில், பிஜு ஜனதாதளம், பி.ஆர்.எஸ்., அகாலி தள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. 2 சுயேச்சை எம்.பி.க்களும் புறக்கணித்தனர். 767 எம்.பி.க்கள் வாக்களித்த நிலையில் 752 வாக்குகள் மட்டுமே செல்லத்தக்கவை. 15 வாக்குகள் செல்லாதவை. பெரும்பான்மைக்கு 385 வாக்குகள் தேவையான நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றார்.

 

இதற்கிடையே, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 14 எம்.பி.க்கள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 427 எம்.பி.க்கள் ஆதரவு உள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், கூடுதலாக 14 வாக்குகள் கிடைத்துள்ளதால், இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மாறி வாக்களித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

அதேநேரம், 315 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுள்ள இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. அதே வேளையில், இந்த தேர்தலில் 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவாகியுள்ளன. அவற்றில், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்களின் 10 வாக்குகளும், எதிர்க்கட்சியை சார்ந்தவர்களின் 5 வாக்குகளும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு பல எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

Right Menu Icon