--- --:--:-- --

இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா..!

2

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள இளையராஜாவிற்கான பாராட்டு விழாவில், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்க உள்ளனர். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்பவர் இளையராஜா. இவரின் இசை பற்றி தமிழ் ரசிகர்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

சினிமா இசையைத் தாண்டி கடந்த மார்ச் 8ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற நிகழ்வில் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றினார். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிம்பொனி மட்டும் 45 நிமிடத்திற்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது. ‘ராஜா ராஜாதி’, ‘பூவே செம்பூவே’, ‘கண்ணே கலைமானே’ என திரைப்பாடல்களாகக் கேட்டு ரசித்தவர்கள், அதனை பிரம்மாண்ட ஆர்கெஸ்ட்ரா இசையாகக் கேட்டு ரசித்தனர்.

இப்படி, திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இளையராஜா, மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசையிலும் சிகரம் தொட்டு சாதனை படைத்துள்ளார். சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இசைஞானி இளையராஜாவுக்கு வரும் சனிக்கிழமை, நேரு உள்விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு அரசு சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. இதில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்க இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

தனக்கு தமிழ்நாடு அரசே பாராட்டு விழா நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கலைஞனுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்துவது இதுவே முதல்முறை என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்சியின் தொடக்கத்தில் இன்னிசை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Right Menu Icon