பிப்., 26-ல் கருணாநிதி நினைவிடம் திறப்பு..!
பிப்ரவரி 26-ஆம் தேதி இரவு 7 மணியளவில் கருணாநிதியின் நினைவிடம் திறக்கப்பட உள்ளது. அலைகளின் தாலாட்டில்.. அண்ணனின் தலைமாட்டில்.. தலைவரின் நினைவிடம் என்ற தலைப்பில் முதமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில், இம்மண்ணை விட்டுச் சென்றாலும், நம் நெஞ்சில் நிறைந்துவிட்ட கலைஞர் கருணாநிதி, மரணத்திலும் போராளியாக – சுயமரியாதை வீரராகச் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றியுடன் பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் அவருக்குரிய இடத்தில், அவரது நினைவிடம் கலைத்திறனுடன் உருவாகியிருக்கிறது. பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ள அதன் திறப்புவிழாவுக்கு அனைவரையும் வரவேற்க கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிலவறையில் பயணித்தால், கலைஞர் வாழ்ந்த காலத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். தலைவர் கலைஞருடனேயே பயணிப்பது போன்ற அனுபவம் கிடைக்கும்.
அவர் பெற்றுத் தந்த செம்மொழித் தகுதி, அவர் உருவாக்கிய கணினிப் புரட்சி, அவர் கட்டமைத்த நவீனத் தமிழ்நாடு, அவருடைய படைப்பாற்றல், அவரது நிர்வாகத்திறன், இந்தியத் தலைவர்களின் பாராட்டுதலைப் பெற்ற கலைஞரின் ஆளுமை உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
என்றென்றும் நெஞ்சில் வாழ்ந்து, நம்மை இயக்கக்கூடிய கலைஞரின் ஓய்விடம் வியக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, பிப்ரவரி 26-ஆம் தேதி இரவு 7 மணியளவில் திறந்து வைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில், தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று உங்களில் ஒருவனாக உரிமையுடனும் உள்ளன்புடனும் அழைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.






