தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்..!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படட்டதாக தெரிகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பெட்ரோனஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனையில், துறைவாரியாக சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கினார். அறிவிப்புகளை செயல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என்றதுடன், புதிய சட்டங்கள், விதிமுறைகளை கொண்டு வரும்போது விரிவான ஆலோசனை, கருத்துகளை கேட்ட பின்பே சட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசு தலைவர் வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள விழாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.





