எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடி நடவடிக்கை – ஸ்டாலின்
தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சிப் பிரச்சனையும் இருக்கக் கூடாது. யாராவது தேவையின்றி கட்சிக்குள் குழப்பமோ, பிரச்சனையோ உண்டாக்கி அது என் காதுகளுக்கு வந்தால் அவர் எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை பாயும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், “நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 23-க்கு இன்னும் 39 நாட்கள் மட்டுமே உள்ளன.
தேர்தல் பணியில் நம் கழகம் தான் No 1 ஆக இருந்து வருகிறது. தேர்தல் களம் என்று வந்துவிட்டால் திமுகக்காரர்கள் சுழன்று சுழன்று பணியாற்றுவார்கள் என்று பத்திரிகையாளர்களும் எதிரிகளுமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.அரசியல் களத்தில் நமது கையே ஓங்கி இருக்கிறது. அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 3000 ரூபாய் வழங்கியது, 1.31 கோடி குடும்பங்களுக்கு மகளிர் உரிமை தொகையாக 5000 ரூபாய் அளித்தது, முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சுமார் 40 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கியது உள்ளிட்ட நலத்திட்டங்களால் பொதுமக்கள் மத்தியில் நமக்கான ஆதரவு பெருமளவு கூடியுள்ளது.
அதேபோல கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க நினைத்தவர்களின் சதியை முறியடித்து, புதிய கட்சிகளை அரவணைத்து மிக பலமான கூட்டணியைக் கட்டியிருக்கிறோம்.கூட்டணி வலிமை, நலத்திட்டங்கள், ஐந்தாண்டு சாதனைகள் உள்ளிட்டவைகளால் நாம் தான் வெல்வோம் என்ற எண்ணத்தை பொதுமக்களிடம் மட்டுமின்றி, எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்.
களம் எல்லாவகையிலும் நமக்கு பாசிட்டிவாக இருக்கிறது. எந்த வகையிலும் சிறு சறுக்கல் கூட இனி வந்துவிடக் கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் அதில் கவனமாக இருக்க வேண்டும். உங்களது ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு அசைவும், பேச்சும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். ஓரணியில் தமிழ்நாடு, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி, வெல்லும் தமிழ்ப் பெண்கள், தமிழ்நாடு தலைகுனியாது என வரிசையாக தேர்தல் பணிகளை ஓய்வின்றி மேற்கொண்டிருந்தோம்.
அது மட்டுமின்றி வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடுகள், இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிரணி மாநாடுகள்… இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் லட்சக்கணக்கான கழக நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். நாம் நடத்திய அத்தனை பரப்புரை, மாநாடுகளை வெற்றி பரப்புரையாக, மாநாடாக மாற்றிய பெருமை உங்களையே சாரும்.






