--- --:--:-- --

108 ஐ அழைத்தால் 102, 104 என அலைக்கழிப்பு… 5 மணி நேர போராட்டம்… அனாமத்தாய் பறிபோன முதியவர் உயிர்…!! கொரோனா சிகிச்சையில் இவ்வளவு அலட்சியமா?

85

சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவருக்கு கூடவே கொரோனா தொற்றும் தொற்றிக் கொள்ள, அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க அலட்சியம் காட்டியதின் விளைவு உயிரே பிரிந்து விட்டது.மேல் சிகிச்சைக்கு மதுரை கொண்டு செல்ல 108 ஐ அழைத்தால் 102, 104 என மாறி மாறி அழைக்கச் சொல்லி அதிகாரிகள் அலைக்கழித்ததால் 5 மணி நேரமாக காரைக்குடி அரசு மருத்துவமனை வாசலில் பரிதவித்த முதியவர் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறி பதைபதைக்க வைத்துள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் மெய்யப்பன் என்ற முதியவர் . உடலில் உப்பின் அளவு அதிகரித்ததால் கிட்னி பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது.

 

“நீண்ட நேரம் காத்திருப்பு”

இன்று கொரோனா ரிசல்ட் தெரிந்த பின் காரைக்குடி மருத்துவமனையில் அனுமதிக்க அவரது மகன் அஜித் அழைத்து வந்துள்ளார். காலை 8 மணிக்கு வந்த அவர், தந்தையுடன் மருத்துவமனை வெளியே காக்க வைக்கப்பட்டுள்ளார். நீண்ட நேரத்திற்கு பின் செவிலியர் வந்து டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் கொரோனா நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படாது. மதுரை தான் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அலட்சியம்!

உடனடியாக அஜித், 108 அவசர எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அவர்கள் நாங்கள் பிசியாக உள்ளோம். 102 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர். 102க்கு தொடர்பு கொண்டால் 104 ஐ தொடர்பு கொள்ளுங்கள் என மாத்தி, மாத்தி போனில் அலட்சியமாக பேசியுள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் வெறுத்துப் போன அஜித் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் உதவியை நாடியுள்ளார்.

 

தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் யசோதா மணி, அரசு தலைமை மருத்துவர் தர்மர் உள்ளிட்ட அதிகாரிகளையும் தொடர்பு கொண்டுள்ளார். அவர்களோ தங்களுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் பேசியுள்ளனர். 8 மணிக்கு வந்த நோயாளியின் உடல் நிலை சில மணி நேரத்தில் கவலைகிடமானது.

 

“ஆனால் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களும், அதிகாரிகளும் கொஞ்சம் கூட மனம் இறங்காமல் பேசியுள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவரோ மருத்துவர் கடிதம் இருந்தால் தான் நோயாளியை மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம் என தெனாவெட்டாக பேசியுள்ளார்”

 

அதிா்ச்சி….வீடியோ

இப்படியாக 5 மணி நேரமாக அலைக்கழிப்பு செய்யப்பட்ட நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மெய்யப்பனின் உயிர் அதற்கு மேல் தாக்குப் பிடிக்கவில்லை. மருத்துவமனை வாயிலேயே அவரது உயிர் பிரிந்தது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டது. மெய்யப்பனின் குடும்பத்தாரும், உறவினர்களும் கதறியழுதது அனைவரையும் கண்ணீர் விடச் செய்து விட்டது. கடைசியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை என்ன மாதிரி பேக் செய்து அடக்கம் செய்வார்களோ அதை மட்டும் உருப்படியாக ஊழியர்கள் செய்தனர்.

சுகாதாரத் துறை இணை இயக்குநர் யசோதா
சுகாதாரத் துறை இணை இயக்குநர் யசோதா

 

“எனக்கு சம்மந்தம் இல்லை”

இப்படி அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என பலரும் காட்டி அலட்சியம் குறித்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் யசோதா மணியிடம் பேசியதற்கு. “எனக்கும் இந்த துறைக்கும் சம்மந்தம் இல்லை” என்றார்.

 

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தர்மரிடம் நாம் கேட்டதற்கு, நான் என்ன செய்ய வேண்டும்? செய்யவேண்டிய எல்லாத்தையும் முறையாக தான் செய்கிறேன். என்னிடம் என்ன எதிர் பார்க்கிறீர்கள். ஒழுங்காதானே பார்க்கிறோம் என்று அலட்சியமாக பேசினார்.

 

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தர்மர்
அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தர்மர்

 

இது குறித்து பேச மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவர் போனை எடுக்கவில்லை.

 


தென்மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து உச்சரித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய தென்மாவட்டங்களில் சுற்றுப் பயணமும் மேற்கொண்டுள்ளார்.  இந்த வேளையில், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சையில் அரசின் லட்சணம் இதுதானா? என்பது போல காரைக்குடி முதியவர் மெய்யப்பனின் உயிர் அனாமத்தாக பிரிந்த சம்பவம் உள்ளது என்றே கூறலாம்.


 

Leave a Reply

Right Menu Icon