வீடுகளில் காற்றோட்ட வசதி நன்றாக இருந்தால் தொற்று பரவாது – புதிய வழிகாட்டு நெறிமுறை
வசிப்பிடங்களில் காற்றோட்டம் நன்றாக இருந்தால் கொரொனா பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் குறையும் என மத்திய அரசு தனது புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளது.
இரண்டாம் நிலை மோசமாக பரவி வரும் சூழலில் வைரஸ் பரவல் தடுப்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில் வீடு மற்றும் அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நன்றாக இருந்தால் தொற்று பரவாமல் பாதுகாத்திடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜன்னல் கதவுகளை திறந்து வைத்திருக்கவும், வென்டிலேட்டர் போன்றவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடு, அலுவலகங்களில் வெளிக்காற்று உள்ளே வரும் வகையில் அறைகளை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம், தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் உடன் காற்றோட்ட வசதியையும் இணைத்து தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.




