தேர்தலுக்குப் பிறகு கருவேலம் ஒழிப்பு இயக்கத்தில் நேரடியாக இறங்குவேன்: வைகோ
தமிழகம் முழுவதும் பரவி விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் தேர்தலுக்குப் பிறகு நேரடியாக ஈடுபடுவேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் நேரில் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் விவசாயத்தை அழித்து, சுற்றுச்சூழலை பாதிக்கும் இந்த நச்சு மரங்களை அகற்ற வேண்டும் என 11 ஆண்டுகளுக்கு முன்பே பொதுநல வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் 39 வழிகாட்டுதல்களை வழங்கி, மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கறிஞர்கள் குழு கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக நீதித்துறைக்கு தமிழக மக்கள் நன்றிக் கடன்பட்டுள்ளனர். கேரளாவில் முளைக்கும்போதே கருவேல மரங்களை அகற்றுகின்றனர். ஆனால் தமிழகத்தில் 1960-களில் விறகுக்காக விதைக்கப்பட்ட இந்த மரங்கள் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இம்மரங்கள் ஆழமாக வேர்விட்டு நிலத்தையும் உயிரியல் சூழலையும் பாதிக்கின்றன. மேற்பரப்பில் வெட்டினாலும் மீண்டும் வேகமாக வளர்கின்றன அத்துடன், “கட்சி, சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒன்றிணைந்து போர்க்கால அடிப்படையில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் இருந்து இந்த பணியை தொடங்க வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.






