--- --:--:-- --

தமிழக அரசு கலைக்கப்படும் என நான் கூறவேயில்லை..! ஹெச்.ராஜா சொல்கிறார்!!

4

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் தமிழக அரசு கலைக்கப்படும் என தான் எங்கும் சொல்லவில்லை என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மறுத்துள்ளார்.

 

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில், அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி விவகாரத்தில் மத பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என குற்றஞ்சாட்டினார்.

 

மேலும்,சி.ஏ.ஏ- வை எதிர்த்து வாக்களித்த 38 எம்.பி.க்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், எதிர்த்து வாக்களித்த தேனி எம்.பி. ரவீந்திரநாத் தாக்கப்பட்டார் எனவும் கூறிய அவர், மதவாத தீய சக்திகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார். திருப்பூரில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்ற நீதிபதிகளை வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் சிலர் மிரட்டியுள்ளனர் எனவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஹெச்.ராஜா கூறினார்.

 

மேலும்,பெருந்துறை, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூரில் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் ஆவணங்கள் எதுவும் இன்றி இருக்கின்றனர் எனவும், வங்கதேசத்தில் இருந்து வந்து தங்கியிருப்பவர்களை கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். சிஏஏவிற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், இந்து விரோதமாக பேசினால் எதிர்வினை வரத்தான் செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும்,அந்நியனுக்கு குடியுரிமை வேண்டுமென தி.மு.க தலைவர் ஸ்டாலின் தேச விரோதமாக போராட்டத்தை தொடர்ந்தால் தேர்தலில் சரியான தீர்ப்பு தருவார்கள் எனவும், மாவட்ட,ஒன்றிய அளவிலான தி.மு.க – வினர் தலைமை சரியில்லை என வெளியேறுவதற்காக என்னோடு பேசிக் கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் கூறினார்

 

மேலும்,சி.ஏ.ஏ – வை அமல்படுத்தாவிட்டால் தமிழக ஆட்சியை கலைப்போம் என தான் எங்கும் சொல்லவில்லை எனவும், சிலர் விசமத்தனமாக பரப்பியுள்ளனர் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் சொன்ன ஏமாற்றம் பற்றி பின்னால் சொல்வதாக கூறியுள்ளார் எனவும், அது அவரது கட்சி தொடர்பானது எனவும் கூறிய அவர், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி குறித்து பேசலாம் என தெரிவித்தார். சிஏஏ ஆதரவு போராட்டத்தினால் பா.ஜ.க வாக்கு வங்கி அதிகரித்து வருகிறது எனவும், சி.ஏ.ஏ – விற்கு நடிகர் ரஜினிகாந்த் முழு ஆதரவு அளிக்கிறார். ஆனால் கமல்ஹாசனுக்கு அச்சட்டம் குறித்த தெளிவு இல்லை எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது கோவை வடக்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன்,நந்தகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon