--- --:--:-- --

நான் தனி மனிதன் யாரிடமும் வேலை செய்யவில்லை – அண்ணாமலை

3

திமுக – பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்து, கூட்டணி ஆட்சி எனும் பேச்சு எழுந்துவருகிறது. இதற்கு ஆதரவாக பாஜகவினரும், மறுப்பு தெரிவித்து அதிமுகவினரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் கூறியபோது, அதிமுகவில் இருந்து ஒருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிவித்திருந்தார்.

 

அமித்ஷாவின் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் விவாதமாக மாறியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கள்ளக்குறிச்சியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக-வை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் பேசுகின்றன. 31 வருடங்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்த, பொன் விழா கண்ட அதிமுக-வை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்துவிட முடியாது.

 

2026- சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும்” எனப் பேசியிருந்தார்.அதேபோல், தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா, தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் நடக்காது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் கிடைக்காது. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.

 

கூட்டணி ஆட்சிக்கு செங்கோட்டையன், வேலுமணி வைத்து பாஜக திட்டமிடுமா என்ற கேள்விக்கு அப்படி இருந்தால் அதிமுக தவிடுபொடியாக்கும் எனத் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் அன்வர் ராஜா கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு அண்ணாமலை, “நான் எதுவும் பேச விரும்பவில்லை. நான் பேசும்போது பேசுகிறேன். நான் யாரிடமும் வேலை செய்யவில்லை. நான் இன்று தனிமனிதனாக இருக்கிறேன். மற்றவர்களின் கருத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது” எனத் தெரிவித்துவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.

 

Right Menu Icon