வீட்டில் வைத்து பிரசவம்..உயிரிழந்த பச்சிளம் குழந்தை..!
குழந்தை பிறப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு என்பார்கள். அதன் ஆபத்தை உணராமல் எத்தனை முறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை பொருட்படுத்தாமல் வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கும் நிகழ்வுகள் தொடர் கதையாகவே உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இணையதளத்தில் படித்து வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததில் பிறந்து சில மணி நேரங்களிலேயே பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது. அபிராமி – ராஜசேகர் தம்பதிக்கு ஏற்கனவே குழந்தை பிறந்து மூன்று மாதத்தில் உயிரிழந்துள்ளது.
அதனால் அலோபதி மருத்துவம் மீது நம்பிக்கை இழந்ததாக கூறப்படுகிறது. இரண்டாவது அபிராமி கருவுற்ற நிலையில் அவரை மருத்துவமனை அழைத்து செல்லாமல் வீட்டில் வைத்து குடும்பத்தினரே கை மருந்துகள் கொடுத்து வந்துள்ளனர். இந்த சூழலில் அபிராமிக்கு பிரசவ வலி ஏற்பட வீட்டில் வைத்து அவரது கணவர் ராஜசேகர் மருத்துவம் பார்த்துள்ளார்.
அதில் பிறந்து சில மணி நேரத்திலேயே மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது. அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் அபிராமியின் வீட்டிற்கு சென்ற சுகாதாரத் துறையினர் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சுகாதாரத்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் அபிராமியின் கணவர் ராஜசேகர் அவரது தாயிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இணையதளத்தில் படித்து வீட்டிலேயே பிரசவத்திற்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியது தெரியவந்துள்ளது.
குழந்தை பிறந்து சில மணி நேரங்களில் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் அதன் பின் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.





