தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!
தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், நாளை கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
நாளை மறுநாள் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
எனினும், தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் தெரிவித்துள்ளது. நேற்று ஈரோடு மற்றும் கரூர் பரமத்தி வெயில் சதமடித்ததாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.






