தென் மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை..!
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் (தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்) மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகப்பட்சமாக சிவகிரி (தென்காசி), சிட்டம்பட்டி (மதுரை), திருப்புவனம் (சிவகங்கை) தலா 4 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 4-5° செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது, ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை குறைந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 4-5° செல்சியஸ் வரை இயல்பை விட மிக அதிகமாகவும், ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது.
அந்தவகையில் கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்பநிலையாக 35.0° செல்சியஸ் பதிவானது.இந்நிலையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.





