சேலத்தில் தமிழ் பேசிய மாணவியை அடித்த தலைமை ஆசிரியை..!
பள்ளி வளாகத்திற்குள் தமிழில் பதிலளித்ததற்காக சேலத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியை மாணவி ஒருவரைத் தாக்கியதாகவும், இது தொடர்பாக அந்தச் சிறுமியின் தந்தை கடந்த திங்கள்கிழமை (மார்ச் 2, 2026) மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி சாய்ராம் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, அந்தச் சிறுமி தனது நண்பர்களுடன் கலை நிகழ்ச்சிகளுக்கு தனது பெயர் பதிவு செய்ய சென்றபோது, பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்களை வழிமறித்து விசாரித்துள்ளார்.
அப்போது அவரின் கேள்விகளுக்கு மாணவர்கள் தமிழில் பதில் அளித்துள்ளனர். அப்போது தலைமை ஆசிரியை அவர்களிடம் மீ்ண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நேரத்தில், அந்தச் சிறுமி திடீரென தலைமை ஆசிரியை முன்பாகச் சிரித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை சிறுமியை தாக்கியதில், அவரது முகம் வீங்கியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மேலும், அச்சம் காரணமாக அவர் பள்ளிக்குச் செல்லவில்லை.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் தலைமை ஆசிரியையிடம் தொலைபேசியில் பேசியபோது, தான் சிறுமியை ஒரே ஒருமுறைதான் அறைந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியைக்கும் பெற்றோருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து நேற்று முன்தினம் (மார்ச் 02) தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், தலைமை ஆசிரியை மற்ற மாணவர்கள் முன்னிலையில் சிறுமியைப் பலமுறை அறைந்துள்ளார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என கடந்த நான்கு நாட்களாக காத்திருந்தோம், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சம்பவத்தின் போது அங்கிருந்த மற்ற மாணவர்களிடம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். மாணவர்கள், தலைமை ஆசிரியை மற்றும் பள்ளி தாளாளர் ஆகியோருடன் நடத்தப்பட்ட தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் எங்களிடம் உள்ளது என கூறியுள்ளார். தற்போது, இந்த புகாரின் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





