வாரிசு இல்லாத சொத்துக்கு ஆசைப்பட்டு மூதாட்டி தலை துண்டாக்கி கொலை..!
தென்காசி மாவட்டம் குளித்தலை அருகே வாரிசு இல்லாத சொத்து தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் மூதாட்டியின் தலையை துண்டாக்கி கொலை செய்த நபர் போலீசில் சரணடைந்தார். சுடலை பாப்பம்மாள் தம்பதிக்கு வாரிசு இல்லாத நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலம் பாதித்து சுடலை உயிரிழந்திருக்கிறார்.
சுடலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது அவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்த முருகன் என்பவர் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து வந்துள்ளார். அந்த உதவிகளை சுட்டிக்காட்டி அவர்களை தனக்கு சொத்தை எழுதித் தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் இருவருக்கும் கடந்த ஓராண்டாகவே தகராறு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை ரேஷன் கடைக்கு சென்று வந்த பாப்பமாளை வழிமறித்து தகராறு செய்தவர் கையோடு கொண்டு சென்ற கோடாரியை கொண்டு அவரது தலையை துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார்.





