--- --:--:-- --

ரேஸில் உயிரிழந்தைவரை விபத்தில் இறந்ததாக கூறி பொய்யை மூடி மறைத்த நண்பர்கள்!

1

சென்னையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞர் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டு உயிரிழந்தது வீடியோ ஆதாரங்களோடு தெரியவந்துள்ளது. கடந்த 13ஆம் தேதி உடலில் பலத்த காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

 

அந்த இளைஞர் விபத்தில் இறந்தார் என நண்பர்கள் கூறவே, மருத்துவர்கள் பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவரின் பெயர் பிரபாகரன் என்றும், அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்றும் தெரியவந்தது.

 

இறந்தவரின் நண்பர்களிடம் காவல்துறையினர் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகளில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. பிரபாகரன் விபத்தில் உயிரிழக்கவில்லை, ரேஸில் ஈடுபட்டு தான் கோர மரணம் அடைந்தார் என்ற உண்மை அப்போதுதான் தெரியவந்தது.

 

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதில் ரேஸில் ஈடுபட்ட 6 பேர் சிக்கினர். காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்கள் பகிரங்கமாகவே இருந்தன. போரூரில் மதர்சா என்பவருடன் ஆட்டோலிஸ் ஈடுபட்டு பிரபாகரன் உயிரிழந்தார் என்பதை அந்த கும்பல் ஒப்புக்கொண்டது.

 

பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் பிரபாகரன் கண்டெய்னர் மீது மோதி உயிரிழந்த வீடியோ ஒன்றும் பதிவாகியிருந்தது. இரு ஆட்டோக்கள் சீறி பாய்ந்து சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற கன்டெய்னரில் கட்டுப்பாட்டை இழந்து மோதி பிரபாகரனின் ஆட்டோ நொறுங்கியது.

 

ஆட்டோ மெக்கானிக்குகள் ரேஸ் செல்வதில் தங்கள் கெத்தை காட்ட இதுபோன்ற உயிரை பணையம் வைத்து தங்களுக்குள் போட்டி வைப்பதும் சகஜம் என கூறியது அந்த கும்பல். அந்தவகையில் போரூரில் கடந்த 13ஆம் தேதி பிரபாகரனுக்கும், மதர்ஷாவிற்கும் 1001 ரூபாய் பந்தயத் தொகையை வைத்து ஆட்டோ ரேஸ் நடந்துள்ளது.

 

எந்த மாதிரியான ஆட்டோவை பயன்படுத்த வேண்டும், காவல்துறையில் சிக்கினால் எதிராளியை காட்டிக் கொடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 20 கட்டுப்பாடுகளை கொண்ட ஒப்பந்தத்தை போட்டு ரேஸ் நடத்தப்பட்டது. அடிக்கடி இதுபோன்ற ரேஸ்கள் நடத்தப்படுவதும் உயிரிழந்த பிரபாகரன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ரேஸ்களில் வெற்றி பெற்றவர் என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதையடுத்து விபத்தில் சிக்கி சிதைந்த பிரபாகரனின் ஆட்டோ உட்பட 4 ஆட்டோக்கள், ஒரு கார், ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுபோன்று பந்தயத்தில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமல்லாமல் பாதையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தாக திகழக்கூடிய நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Right Menu Icon