விண்ணில் விமான ஜாலம்… மண்ணில் மரண ஓலம்..! விஜய் மாநாட்டுக்கு கேள்விகளால் குடைச்சல்.. விமான சாகச ஏற்பாடுகளால் மன உளைச்சல்..!
சென்னையில் நடைபெற்ற விமான சாகசங்களை நேரில் கண்டு மக்கள் பிரமித்துப்போன நிலையில், அந்த மகிழ்ச்சி சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. அரசு நிர்வாகத்தின் மோசமான ஏற்பாடுகளால் 5 உயிர்கள் பலியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். கடும் நெரிசலால் சென்னை விழிபிதுங்க, மக்கள் மாளா துயரில் தவித்தனர். விஜய் கட்சியின் மாநாட்டுக்கு கிடுக்கிப்பிடி கேள்விகளால் துளைத்தெடுத்த காவல்துறை, சென்னை சாகச நிகழ்ச்சியில் எந்த கேள்விகளையும் முன்வைக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய விமானப்படை, கடந்த 1932ம் ஆண்டு அக்.8ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அதைக் கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அக். 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
உச்சி வெயில் கொளுத்தும் பகல் 11 மணி முதல் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் பலரும் குடை, கையில் குடி நீர் பாட்டில்களுடன் வந்தனர். வி.ஐ.பி.க்கள் அமர சொகுசான பந்தல் போடப்பட்டிருக்க, மக்கள் சுடும் மணலில் சுட்டெரிக்கும் வெயிலில், குழந்தைகளுடன் காக்க வைக்கப்பட்டனர்.
விமான சாகசங்கள் என்னவோ உண்மையில் நமது இந்திய விமானப்படையில் திறமையை நிரூபித்ததோடு, மக்களுக்கும் பிரமிப்பை தந்தது. விண்ணில் வண்ண புகையை கக்கியபடி இதயம் போட்டு அம்புவிட்ட ஹெலிகாப்டர்கள், குட்டிக்கரணம் போட்ட போர் விமானங்கள் என, மக்களுக்கு கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 முதல் 12 லட்சம் பேர் நேரில் கண்டு களித்ததாக தெரிவிக்கப்பட்டது.
விமான சாகசங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க, அதன் பின்னர் நடந்த கொடுமைகள் ஆறாத வடுக்களாக மாறிவிட்டன. வெயில் மற்றும் நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், அவர்களில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
இறந்தவர்கள் திருவொற்றியூர் கார்த்திகேயன் (34), ஆந்திராவை சேர்ந்த தினேஷ்குமார் (37), கொருக்குப்பேட்டை ஜான் பாபு (56), பெருங்களத்தூர் சீனிவாசன் (52) எனத் தெரிய வந்துள்ளது. அதேபோல், மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்தார்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் கலந்து செல்ல, சென்னை மெரினா காமராஜர் சாலை, ஆர்.கே. சாலை, வாலாஜா சாலை, அண்ணா சாலை என எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல். பலரும் குடிநீரின்றி தவித்துப் போக, வழியில் தென்படும் வீடுகளில் போய் குடிநீர் கேட்டும் கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்கியும் தாகம் தணித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. மெரினா காமராஜர் சாலை, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான கார்கள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் என கிளம்ப, நெரிசலால் மக்கள் விழிபிதுங்கி நின்றனர். சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போனது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல முடியாமல் திணறினர். அதிகளவில் வெயில் வாட்டியதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியோர் சோர்வடைந்தனர். பலர் மயங்கினர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கிக் கொள்ள உரிய சிகிச்சை தர முடியாத அவலம் ஏற்பட்டது.

வாகனங்களில் தான் நெரிசல் என்றால், மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக செங்கல்பட்டு- சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி – சிந்தாதிரிப்பேட்டை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது.
கொந்தளித்துப் போன மக்கள், நிர்வாகக் குளறுபடிகளுக்கு அரசு காரணம் என திட்டித் தீர்த்தனர். காவல், போக்குவரத்து, ரயில்வே துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே அவதிக்கு காரணம் என்று பலரும் குற்றம்சாட்டினர்.
ரயில்கள், பேருந்துகளில் கூட்ட நெரிசலில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த மக்களின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் ‘மோசமான ஏற்பாடு’ என்று தலைப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ‘டேக்’ செய்து பதிவிட்டனர்.
விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும்போது, கண்டுகளிக்க லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என அறிந்தும் அரசும், ரயில்வே துறையும் போதிய மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர்.
விக்கிரவாண்டியில் விஜய் நடத்தவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி வழங்க, 32 கேள்விகளை கேட்டு காவல்துறை துளைத்தெடுத்தது. அரசியல் ரீதியாக விஜய்க்கு குடைச்சல் கொடுக்க இப்படி கேள்விகள் கேட்கப்பட்டதாக சிலர் விமர்சனமும் செய்தனர். என்றாலும் அது வழக்கமான நடைமுறை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
விஜய் மாநாட்டிற்கு காதை தீட்டிக் கொண்டு, கண்ணை திறந்து கொண்டு செயல்பட்ட அரசும் காவல் துறையும் மெரினாவில் பல லட்சம் பேர் திரள்வார்கள் என்று தெரிந்தும் கோட்டை விட்டது, அரசின் தோல்வியாகவே கருதப்படுகிறது.
மொத்தத்தில் சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியானது, சென்னை மக்களுக்கும் ஒரு சாகக நிகழ்ச்சியாக மாறிப் போனது. மெரினாவில் இருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி, உயிர் பிழைத்து வீடு திரும்பியதே பெரும் சாகசமாகிப் போனது.
வருங்காலத்திலாவது லட்சக்கணக்கில் மக்கள் கூடுமிடங்களில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
அரசை வசைபடியா அதிமுக, பாஜக!
சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு நேரிட்டதற்கும் மக்கள் சொல்லனா துயரை சந்தித்தற்கும் அரசின் அலட்சியமே காரணம் என்று அதிமுகவும், பாஜகவும் அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “வான் சாகச நிகழ்ச்சி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக்கூட முறையாக ஒருங்கிணைக்க அரசு தவறிய விட்டது. அரைஸ்ன் நிர்வாக சீர்கேட்டிற்கு எனது கடும் கண்டனங்கள்” என்று கூறியுள்ளார்.

பாஜக சார்பில் அதன் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் பெருகி வழிந்ததை சென்னை காவல்துறை கணிக்க தவறியது அதிர்ச்சி அளிக்கிறது. இது முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வி என்றால் அது மிகையாகாது. திட்டமிடத் தெரியாத அரசு நிர்வாகம், மக்களின் நாடித்துடிப்பை அறியாது செயல்பட்டிருப்பது வெட்கக்கேடு” என்று சாடியுள்ளார்.
குடி நீர் வசதி கூட இல்லை…
அரசை விமர்சித்த விசிக!
ஆளும் திமுக கூட்டணியில் உள்ள விசிகவும் விமான சாகச நிகழ்ச்சியில் அரசின் குளறுபடியை கண்டித்துள்ளது. இது தொடர்பாகவின் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில், “மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் வான்படை சாகச கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது?

திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும். கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
எல்லாம் செய்திருந்தோம்…
சமாளிக்கும் அமைச்சர் மா.சு.
சென்னை மெரினா கூட்ட நெரிசல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசை வரிசைகட்டி விமர்சிக்க, அமைச்சர் மா.சுப்பிரமணியனோ குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.

இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி இந்திய ராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. போதிய ஏற்பாடுகளை அரசு செய்திருந்தது. இறப்பில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது” என்றார்.





