தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்..!
தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக் காலம் அமலுக்கு வருவதால், மீன்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக் காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றது.
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். சுமார் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும்.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 2,000 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்படும். குறிப்பாக ராமநாதபுரம் பகுதிகளில் மட்டும் 700க்கும் அதிகமான விசைப்படகுகள் நிறுத்தப்படும்.
மேலும் தடைக் காலத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளைப் பழுது நீக்குதல், வலைகளைச் சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர். மீன்பிடித் தடைக் காலத்தின்போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா ₹8,000 தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.






