பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்..!
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏ.வி. எம் சரவணன் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 86.
ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பின்னர் அந்த நிறுவனத்தை அவரது மகன் ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.
பல சூப்பர் ஸ்டார் நடிகர்களை உருவாக்கிய கம்பெனி தான் ஏ.வி.எம் புரொடக்ஷன் நிறுவனம். ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார் நடத்தி வந்த நிறுவனத்தை ஏவிஎம் சரவணன் கவனித்து வந்தார். தற்போது அவரது மகன் எம்.எஸ்.குகன் கவனித்து வருகிறார்.
சிறிது காலமாக வயது மூப்பின் காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இந்த நிலையில் இன்று காலமானார். இவருக்கு வயது 86. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்த ஏ.வி.எம் சரவணன், ஒரு மாதத்திற்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வீட்டில் கடந்த ஒரு மாதங்களாக இருந்தார். இந்த நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு காலமானார். 1958ல் இருந்து ஏவிஎம் நிறுவனத்தின் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். இவர் ஏவிஎம் செட்டியாரின் மூன்றாவது மகன். ஏவிஎம் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றியவர் ஏவிஎம் சரவணன்.
ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரின் வளர்ச்சியில் இவரின் பங்களிப்பு உள்ளது. இன்று மாலை 4 மணி வரை ஏவிஎம் ஸ்டுடியோ மூன்றாவது தளத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு ஏவிஎம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.நேற்று அவருடைய பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது





