--- --:--:-- --

எல்லாமே ஏழரை… அப்செட் ஆனந்தன்! * திருப்பூர் வடக்கில் வெற்றிக்கு போராட்டம்.. * ஊடகங்களை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு!

WhatsApp Image 2026-04-08 at 12.50.07 PM

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் சந்தித்த அடுத்தடுத்த சறுக்கல்களால், கடும் அப்செட் ஆகி உள்ளார். அதிமுக வேட்பாளர் என்ற ஒன்றுக்காக மட்டுமே ஆனந்தனை ஆதரிப்பதாக, கட்சியினரும் புழுங்குகின்றனர். வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் எதிர்ப்பலை நிலவுவதால், ஊடகங்களையும் ஒதுக்கி வைத்துள்ளார் எம்.எஸ்.எம். ஆனந்தன்.

 

வேட்புமனு தாக்கலின்போது, “யாருங்க நீங்க… சுயேச்சை வேட்பாளரா?” என்று அலுவலக நுழைவாயிலில் காவலர் கேட்ட இந்த ஒற்றைக் கேள்வி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனின் அரசியல் வாழ்விலேயே மறக்க முடியாத ‘தக் லைஃப்’ சம்பவமாகிவிட்டது. “நான் யாருன்னு தெரியலையா?” என்று அவர் எகிற, “தெரிஞ்சா ஏன் கேக்கப்போறேன்” என காவலர் கூலாகப் பதில் சொல்ல… அங்கேயே ஆரம்பித்துவிட்டது ஆனந்தனின் ‘ஏழரை’ அத்தியாயம்!

திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி இப்போது அனல் பறக்கும் தேர்தல் களமாக மாறியிருக்கிறது. ஆனால், அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கோ இது வேர்க்க விறுவிறுக்க வைக்கும் ‘வெயிலோடு விளையாடு’ ரகம். முன்னாள் அமைச்சர், மாவட்டச் செயலாளர் எனப் பந்தாவாக வலம் வந்தவருக்கு, சொந்த ஊரிலேயே அடையாளம் தெரியாத அளவுக்கு நிலைமை போனதுதான் இப்போது திருப்பூரின் ஹாட் டாபிக்.

 

பல்லடம் டூ திருப்பூர்: தப்பி வந்த ஆனந்தன்!

கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல்லடம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் ஆனந்தன். அங்கே அவர் செய்த ‘சாதனைகளை’ விட, செய்யாத ‘சோதனைகளே’ அதிகம் என்கிறார்கள் அந்தத் தொகுதி மக்கள். “பல்லடத்துல நின்னா டெபாசிட் காலி” என்கிற ரகசிய ரிப்போர்ட்டைக் கண்டு அலறியடித்த ஆனந்தன், பாதுகாப்பான புகலிடம் தேடி மீண்டும் திருப்பூர் வடக்குக்கே வண்டியைத் திருப்பினார்.

 

உண்மையில், திருப்பூர் வடக்கு மக்கள் எதிர்பார்த்தது எளிமையின் சிகரமாக வலம் வரும் சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயகுமாரைத்தான். “விஜயகுமார் அண்ணனைப் பார்த்தா எப்ப வேணும்னாலும் பேசலாம், குறைகளைச் சொல்லலாம். ஆனா இவரு மந்திரி பவர்லயே இருக்காரு” எனத் தொகுதிக்குள் ஒரு குமுறல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனந்தனுக்கு சீட் என்றதும் அதிமுக தொண்டர்களே ஒரு நிமிடம் ‘ஷாக்’ ஆகிப் போனார்கள். “சின்னத்துக்காக வேலை செய்வோம், ஆனா வேட்பாளருக்காக மனசு வரலையே” என்பதுதான் ரத்தத்தின் ரத்தங்களின் தற்போதைய மைண்ட் வாய்ஸ்.

 

19 பேருக்கு 500 ரூபாய் தந்த ‘தாராள’ பிரபு!

வேட்புமனுத் தாக்கலின்போது நடந்த அந்தத் ‘தொகை’ சர்ச்சை, ஆனந்தனை இன்னும் அப்செட் ஆக்கியிருக்கிறது. மனுத் தாக்கலுக்குப் பின்னால் வந்த ஒரு முக்கிய ஆதரவாளர், வெயிலில் காய்ந்து கருகிப் போன 19 பேரைத் திரட்டி வந்திருக்கிறார். “அண்ணன் கவனிப்பாரு” என நம்பிக்கையோடு காத்திருந்த அவர்களுக்கு, மொத்தமாகச் சேர்த்து 500 ரூபாய் கைமாற்றப்பட்டிருக்கிறது.

 

“ஒரு ஆளுக்கு 30 ரூபாய்க்குக் கூடத் தேறலையேப்பா… இதுக்கு பேசாம வீட்டிலேயே இருந்திருக்கலாம்” என அந்தப் பத்தொன்பது பேரும் புலம்பிய புலம்பல், இப்போது சமூக வலைதளங்களில் ‘மீம்’ மெட்டீரியலாகிவிட்டது. இந்தத் தகவல் ஆனந்தன் காதுக்குச் செல்ல, “ஏற்கெனவே காவலாளி கேட்ட கேள்வியிலேயே நொந்து போயிருக்கேன், இதுல இது வேறயா?” எனத் தலையில் கைவைத்தபடி உட்கார்ந்துவிட்டாராம் முன்னாள் அமைச்சர்.

 

ஊடகங்களைக் கண்டால் ‘உசிரே’ போகிறது!

 

வாக்குச் சேகரிக்கச் செல்லும் இடங்களில் எல்லாம் ஆனந்தனுக்கு ‘ரெட் கார்டு’ காட்டுகிறார்கள் பொதுமக்கள். “பல்லடத்துல என்ன செஞ்சீங்கன்னு இங்க வந்திருக்கீங்க?” எனப் பல இடங்களில் கேள்வி மேல் கேள்வி கேட்கப்பட, ஊடகங்களை கண்டாலே ஆனந்தன் இப்போது அலறுகிறார். உள்ளூர் செய்தியாளர்கள் யாராவது மைக் பிடித்து முன்னால் நின்றால், “அப்புறம் பேசுறேன்… அவசரம்” என எஸ்கேப் ஆகிறார். எதிர்ப்பலை ஊடகங்களில் வெளிவந்துவிட்டால் அது கட்சித் தலைமைக்குத் தெரிந்துவிடுமே என்கிற பயம்தான் அவரைப் பத்திரிகையாளர்களை விட்டு ஓட வைக்கிறது.


தூக்கிப் பிடிக்கும் தூண் விஜயகுமார்!

எம்.எஸ்.எம். ஆனந்தன் இப்போது அரசியல் ரீதியாகத் தனித்துவிடப்பட்ட ஒரு தீவைப் போலத் தெரிந்தாலும், அவருக்குக் கிடைத்திருக்கும் ஒரே ஆக்ஸிஜன் சிலிண்டர் தற்போதைய எம்.எல்.ஏ. விஜயகுமார்தான். “விஜயகுமார் இல்லாம ஆனந்தன் ஒரு வார்டுக்குள்ள கூடத் துணிஞ்சு நுழைய முடியாது” என்பதுதான் கள யதார்த்தம்.

 

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சிக்காலம் என்றாலும், ஒரு எம்.எல்.ஏ-வாகப் போராடி விஜயகுமார் கொண்டு வந்த திட்டங்கள் மலைக்க வைக்கின்றன. 1,063 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 200 கோடி ரூபாய் சாலை உள்கட்டமைப்பு, 24 கோடி ரூபாய் துணை மின் நிலையம் என அவர் செய்த காரியங்கள் மக்களிடம் நற்பெயரை ஈட்டித் தந்துள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்பட்ட சந்தைகளும் பூங்காக்களும் விஜயகுமாரின் ‘வொர்க் ஷீட்டில்’ வலுவாக இருக்கின்றன. “நாங்க ஓட்டுப் போடுறது விஜயகுமாருக்காகவும், அந்த இரட்டை இலைச் சின்னத்துக்காகவும்தான். வேட்பாளருக்காக இல்ல” எனத் தெள்ளத்தெளிவாகச் சொல்கிறார்கள் மக்கள்.


சத்யபாமா Vs ரவி: பிரியப் போகும் வாக்குகள்!

தற்போதைய களத்தில் தவெக வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கும் முன்னாள் எம்பி சத்யபாமா, பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது நமது கள ஆய்வில் தெரிய வருகிறது. விஜய்யின் செல்வாக்கும், சத்யபாமாவின் தனிப்பட்ட அறிமுகமும் அவருக்குப் பலமாக உள்ளன. இது யாருக்குப் பாதிப்பு?

 

‘குற்றம் குற்றமே’ நிருபர்கள் குழு நடத்திய ஆய்வின்படி, சத்யபாமா பிரிக்கும் வாக்குகள் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரவியின் வாக்கு வங்கியைத்தான் பதம் பார்க்கின்றன. இது மறைமுகமாக அதிமுகவின் ஆனந்தனுக்குச் சாதகமாக முடியும் சூழல் உருவாகியுள்ளது.

 

வெற்றி யாருக்கு? கணிப்புகள் இதோ!

 

நமது குற்றம் குற்றமே நிருபர்களின் கள ஆய்வு முடிவில், அதிமுக 34 சதவீத வாக்குகளுடன் தொகுதியை தக்க வைக்கிறது. தவெக வேட்பாளர் சத்யபாமா 31 சதவீத வாக்குகளுடனும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரவி 27 சதவீத வாக்குகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

 

வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்குத் தனிப்பட்ட செல்வாக்கு ‘ஜீரோ’ என்றாலும், கட்சிச் சின்னம், விஜயகுமாரின் இமேஜ் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான வாக்குச் சிதறல் ஆகிய ‘திரிவேணி சங்கமம்’ அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லலாம். ஆனாலும், வெற்றிக் கோடு என்பது மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்திலேயே இருக்கும்.

 

மொத்தத்தில், திருப்பூர் வடக்குத் தொகுதியில் ஆனந்தன் வெற்றி பெறுவது என்பது, அவர் அடித்த சிக்சரால் அல்ல… மற்றவர்கள் செய்த ஃபீல்டிங் தவறுகளாலும், விஜயகுமார் கொடுத்த ‘பேட்டிங்’ டிப்ஸாலும்தான் என்பது கள யதார்த்தம்.

Leave a Reply

Right Menu Icon