ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி தற்கொலை முயற்சியா..?
ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேச மூர்த்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் மதிமுகவின் கணேச மூர்த்தி திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த முறை ஈரோடு தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்காமல் திமுகவே போட்டியிடுவதாக அறிவித்தது. உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஈரோட்டை சேர்ந்த கே.இ.பிரகாஷ் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
2024 மக்களவைத் தேர்தலிலும் மதிமுகவுக்கு ஒரு தொகுதி திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டது. திருச்சி தொகுதி வழங்கப்பட்ட நிலையில் அதில் மதிமுக சார்பில் வைகோவின் மகனான துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இது ஒருபுறமிருக்க தற்போது ஈரோடு எம்.பியாக உள்ள கணேச மூர்த்தி கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வருகின்றன.இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.






