--- --:--:-- --

உயிரே போனாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் – துரை வைகோ

5

க்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க நிர்பந்திக்கப்பட்டதாக மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதங்கம் தெரிவித்தார். திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

அந்த தொகுதியில் வைகோவின் மகனும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ போட்டியிடுகிறார். இந்நிலையில், திருச்சியில் உள்ள அறிவாலயத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினர்.

 

கூட்டத்தில் பேசிய துரை வைகோ, 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தனக்கு கிடையாது. தனது அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது கட்சியினர் தன்னை அரசியலுக்கு அழைத்து வந்தவிட்டனர்.

 

தனது அப்பா வைகோ ஒரு சகாப்தம். இதை கூறியதும் மேடையிலேயே தேம்பித் தேம்பித் அழுதார் துரை வைகோ. தற்போது மக்களவைத் தேர்தலில் கட்சியில் உடன் இருப்பவர்களுக்கு சீட்டு கொடுங்கள் என கூறினேன். அவர்களுக்கு தானே உடனிருந்து வேலை செய்கிறேன் எனவும் தெரிவித்தேன். இருப்பினும் கட்சியினரின் வற்புறுத்தல் காரணமாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என துரை வைகோ கூறினார்.

 

இதனிடையே திமுக மாவட்ட செயலாளர் ஒருவர், துரை வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டு ஆவேசமடைந்த துரை வைகோ, அண்ணாவும் திமுக, கருணாநிதியும் திமுக, எங்க அப்பா வைகோவும் திமுக. திமுகவை தான் மதிக்கிறேன்.

 

ஆனால் செத்தாலும் தங்களது தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்றார். எங்களை புண்படுத்தாதீர்கள். வேண்டுமென்றால் நீங்களே உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள். தாங்கள் சிறிய கட்சி தான். 40 தொகுதிகளிலும் பிரசாரம் மட்டும் செய்கிறோம் என்று பொங்கி எழுந்தார். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Right Menu Icon