திருப்பூரில் என் மண், என் தேசம் விழிப்புணர்வு ஊர்வலம்..!
இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் என் மண் , என் தேசம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறை, தாய்பால் வாரம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாம் திருப்பூரில் இன்று நடைபெற்றது.
திருப்பூர், இடுவாய் பகுதியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாமிற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்டெல்லா தலைமை தாங்கினார். மத்திய மக்கள் தொடர்பகம் சந்திரசேகர் வரவேற்றார்.

இதில், குமரன் கல்லூரி நாட்டு நலப்பணி மாணவிகள் கலந்து கொண்டு என் மண் , என் தேசம், குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொண்டனர். ஊர்வலத்தை இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் துவக்கி வைத்தார். இடுவாய் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபம் வரைக்கும் மாணவிகள் ஊர்வலம் சென்றனர்.
பின்னர், மாணவிகள் என் மண் , என் தேசம் குறித்து உறுதி மொழி ஏற்று கொண்டனர். சிறுதானிய உணவு குறித்து வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் கண்காட்சியை மாணவிகள் பார்வையிட்டனர்.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செளமியா சிறுதானியங்கள் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, சிறுதானிய உணவு மேற்கொள்வதன் மூலம் மாணவிகள் அடையும் பயன்கள் குறித்து பேசினார். நிதி சார் மேலாண்மை ஆலோசகர் ஜோதி சுப்பிரமணியம் மாணவிகளுக்கு சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.





