சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு தானே நடந்து வனப்பகுதிக்குள் சென்ற யானை !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனப்பகுதிக்குட்பட்ட பெத்திக்குட்டை புதுக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்துள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து அறிந்த சிறுமுகை வனச்சரகர் செந்தில் குமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் மூலம் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.
நீண்ட நேர சிகிச்சைக்குப்பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தானே நடந்து வனப்பகுதிக்குள் சென்றது.
இதுகுறித்து சிறுவனச்சரகர் செந்தில்குமார் கூறுகையில் ” காட்டு யானைகள் உணவைத்தேடி பல கி.மீ தூரம் நடப்பவை.தற்போது இடப்பெயர்ச்சி காலம் என்பதாலும்,பவானிசாகர் அணையில் நீர் வரத்து உள்ளதாலும் ஆற்றின் மறுகரையை கடக்க முடியவில்லை.இதனால் போதுமான உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் உடல் சோர்வு ஏற்பட்டு யானை உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்,வனத்துறை மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ள யானை தற்போது வனப்பகுதிக்குள் தானே நடந்து சென்றுள்ளதாகவும்,இந்த யானையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்படும் ” எனவும் தெரிவித்துள்ளார்.






