--- --:--:-- --

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது..!

1

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3 கட்டங்களாக விஜய் கல்வி விருது வழங்க உள்ளார்.

 

இதன் முதற்கட்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமையான இன்று நடைபெற உள்ளது. இதில் வட மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், மாவட்டச் செயலாளர்கள் என 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர், 12ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர், அவர்களின் பெற்றோர் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

மாமல்லபுரத்தில் விழா நடைபெறும் இடத்திற்கு காலை 7 மணி முதல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். காலை 9 மணி அளவில் தொடங்கும் இந்த விழாவில் பங்கேற்பவர்களுக்கு சைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியார் தன்னார்வலர்கள் மற்றும் தவெக தன்னார்வலர்களுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

இது முற்றிலும் கல்வி சார்ந்த நிகழ்ச்சி என்பதால் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கட்சிப் பதாகைகள் இருக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Right Menu Icon