டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி..!
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்ததால் செங்கோட்டையன் அக்கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதனால், அதிருப்தியடைந்த செங்கோட்டையன் கடந்த வாரம் டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அதிமுக மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி. எஸ் பி வேலுமணி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர். டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களையும் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்த பாஜகவிற்கு நன்றியுடன் இருப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அவரது டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.





