இன்றைக்குள் விளக்கம் தர ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியில் தாயார் குறித்து அவதூறாக பேசிய சர்ச்சை தொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று, ஆ. ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்மையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். தனது தாய் குறித்து அவதூறக பழித்து பேசிய ராசாவின் செயல் குறித்து, தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிச்சாமி கண்ணீர் மல்க குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்ப்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆ.ராசாவின் மீது வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில், சர்ச்சை தொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று, ஆ. ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மலேய் மாலிக் அனுப்பிய நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது: பிரசாரத்தின்போது கட்சிகளும் வேட்பாளர்களும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மற்றும் அவரது பொதுவாழ்க்கைக்கு சம்பந்தப்படாத செயல்பாடுகள் பற்றி விமர்சிக்கக்கூடாது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் விதி கூறுகிறது.
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 26ம் தேதி பிரசாரம் செய்த போது நீங்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறாக பேசியதாக புகார் பெறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் பெறப்பட்டது. அதில் உங்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
உங்களது இந்த பேச்சை தேர்தல் ஆணையம் கவனித்து பார்த்ததில் நீங்கள் அவதூறாக மட்டும் அல்ல, ஆபாசமாகவும் ஒரு பெண்ணின் தாய்மையை குறைத்தும் பேசி தேர்தல் நடத்தை விதிகளை மிக மோசமாக மீறியிருப்பது தெரிகிறது. எனவே, உங்கள் தரப்பு கருத்தை இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்குள் நீங்கள் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





