தமிழகத்தின் 2-வது தலைநகரமாகுமா மதுரை..? இதிலும் மாத்தி மாத்தி பேசும் அதிமுக அமைச்சர்கள்!!
மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகரமாக்க வேண்டும் என்ற குரல் த் திடீரென ஒலிக்கத் தொடங்கி அதற்கு தென்மாவட்டங்களில் அமோக ஆதரவும், வரவேற்பும் கிடைத்துள்ளது. ஆனால் இதிலும் அதிமுக அமைச்சர்களுக்கு இடையே 2-வது தலைநகரம் மதுரையா? திருச்சியா? என இரு வேறு கருத்துக்களை கூறி குழப்பம் செய்து மல்லுக்கட்டுவது தான் சர்ச்சையாகியுள்ளது.
தமிழகத்தின் தலைநகரமான சென்னை, மாநிலத்தின் வடக்கு மூலையில் அமைந்துள்ளது. பிரிட்டிசார் ஆட்சியிலும் சரி, சுதந்திரத்திற்கு பின்னரும் சில ஆண்டுகளாக தமிழ்நாடு என்பது கிடையாது. ஆந்திராவின் பெரும் பகுதியும் இணைந்து மதராஸ் மாகாணமாக திகழ்ந்தது. தலைநகரமாக மதராஸ் என்று அப்போது அழைக்கப்பட்ட சென்னை திகழ்ந்தது. அப்போதைய நிலைமைக்கு துறைமுகம், உயர் நீதிமன்றம், சட்டசபை என அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் மதராஸ் மாகாணத்துக்கு சென்னை மையப்புள்ளியாக திகழ்ந்தது.
சுமார் 700 கி.மீ.தொலைவு…
ஆனால் ஆந்திரா மாநில பிரிவினைக்குப் பின், தமிழகத்தின் தலைநகரமாக சென்னை திகழ்ந்தாலும், மாநிலத்தின் பெரும் பகுதி மக்கள் அவசிய, அத்தியாவசிய பணிக்கு சென்னைக்கு வர வேண்டுமெனில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதும், பல மணி நேர விரயமும் செலவழிக்க வேண்டியதாக உள்ளது. தெற்கு கடைக்கோடியில் உள்ள குமரியில் இருந்து சுமார் 700 கி.மீ.தொலைவு என்பதால் சென்னைக்கு ஒரு பணி நிமித்தமாக வந்து செல்ல வேண்டுமெனில் 2,3 நாட்களை ஒதுக்க வேண்டி உள்ளது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கோவை கொங்கு மண்டலம் தஞ்சை டெல்டா போன்ற பகுதிகளில் இருந்தும் சென்னை வெகு தொலைவு தான்.

தலைநகர் மாற்றம் “திட்டம் அம்போ”
இதனால் 1980 களில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தலைநகரையே சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்ற திட்டமிட்டு அதனை செயல்படுத்தவும் முனைப்பு காட்டினார். தமிழகத்தின் மையப்புள்ளியாக திருச்சி விளங்கியதும், காவிரி நதிக்கரையில் இந்நகரம் அமைந்துள்ளதும் ஒரு தலைநகருக்கு வேண்டிய சிறப்பம்சங்கள் இருந்ததால் எம்ஜிஆரின் இந்தத் திட்டத்துக்கு அமோக வரவேற்பு இருந்தது.
ஆனால் தலைநகர் மாற்றம் பின்னணியில், எம்ஜிஆரின் வேறு ஒரு சூட்சுமம் இருப்பதாக, அப்போது எதிர்க் கட்சியாக இருந்த திமுக கருதியது. 1977 முதல் 84 வரை தமிழகத்தில் எம்ஜிஆரின் செல்வாக்கு கொடி கட்டிப் பறந்தாலும், சென்னை மாநகரில் மட்டும் செல்லுபடியாகவேயில்லை. திமுகவின் கோட்டையாக திகழ்ந்த சென்னையில் அதிமுகவின் வெற்றி என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிதாகத் தான் இருந்தது. இதனாலேயே சென்னையில் திமுகவை பழிவாங்கும் ஒரு திட்டத்துடன் தலைநகரையே திருச்சிக்கு மாற்ற எம்ஜிஆர் சூழ்ச்சி செய்வதாக கருணாநிதி கடும் எதிர்ப்பு காட்டினார்.திமுகவின் முட்டுக்கட்டையால் தலைநகர் மாற்றம் திட்டம் அம்போவானது.
அமோக ஆதரவு
இப்போது, 40 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தின் 2-வது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக் குரல்கள் திடீரென உரக்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. சென்னைக்கு அடுத்து தமிழகத்தின் பெரும் நகரம் மட்டுமின்றி அனைத்து சிறப்புகளும் பெற்ற மதுரை, தென் தமிழ் நாட்டின் மையமாக விளங்குகிறது. இதனால் குமரி முதல் மதுரையைச் சுற்றியுள்ள அத்துணை பேரும் கட்சிகளை கடந்து மதுரையை 2-வது தலைநகராக்கும் திட்டத்துக்கு அமோக ஆதரவும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.
சர்ச்சை
ஆளும் அதிமுக தரப்பிலோ மதுரையைச் சேர்ந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு படி மேலே போய் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே மதுரையை 2-வது தலைநகராக்க வேண்டும் என தீர்மானம் போட, மற்றொரு அமைச்சரான செல்லூர் ராஜுவோ, செய்தியாளர்களைக் கூட்டி பிரஸ் மீட்டே நடத்தி மதுரையை 2-வது தலைநகராக்க வேண்டும் என குரல் கொடுத்தார். இதனால் 2-வது தலைநகரம் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கிய நிலையில், திருச்சி பகுதியிலிருந்து திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும், திருச்சியைச் சேர்ந்த அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜனே இந்த எதிர்ப்புக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார். எம்.ஜி.ஆரே திருச்சியைத் தான் தேர்வு செய்தார். அதனால் திருச்சியில் தான் அமைய வேண்டும் என மதுரைக்கு எதிராக குரல் கொடுக்க, அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அதிமுக அமைச்சர்கள் மாறி, மாறி கருத்து கூறி சர்ச்சை ஏற்படுத்தியது போல 2-வது தலைநகரம் பிரச்னையும் சர்ச்சையாகியுள்ளது.
அரசியல் நாடகம்தானா?
இதில் திருச்சி காங்கிரஸ் எம்.பி.யான திருநாவுக்கரசரும் திருச்சியில் தான் 2-வது தலைநகரம் உருவாக்க வேண்டும் என்று கூறியதுடன், தற்போதைக்கு தேர்தல் ஆதாயத்துக்காக அதிமுக இந்தப் பிரச்னையை கையிலெடுத்துள்ளது என்று குட்டும் வைத்துள்ளார். அப்ப எல்லாமே அரசியல் நாடகம்தானா? என பாவம் பொது ஜனங்கள் முழிக்கிறார்கள்.







