ஆதிக்க சாதியினர் பாலியல் வன்முறையை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்..!
இந்திய உச்ச நீதிமன்றம், பாலியல் குற்றங்கள் மற்றும் நலிந்த பிரிவினர் தொடர்பான வழக்குகளைக் கையாளும் போது நீதிபதிகள் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முயற்சியால் வெளியிடப்பட்ட பாலின வார்ப்புருக்களை எதிர்ப்பதற்கான கையேடு (Handbook on Combating Gender Stereotypes) தொடர்பாக எழுந்த சில அதிருப்திகளைத் தொடர்ந்து இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இது குறித்து ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி அனிருத்தா போஸ் தலைமையில் நிபுணர் குழு ஒன்றை அமைத்து, நீதிபதிகளுக்கான விரிவான வழிகாட்டுதல்களைத் தயாரிக்குமாறு போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முந்தைய 2023-ஆம் ஆண்டு கையேடு, சட்டத்துறையில் பெண்களைப் பற்றி நிலவும் தவறான பிம்பங்களையும் சொற்களையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இருப்பினும், அந்த கையேட்டில் பயன்படுத்தப்பட்ட சில கருத்துக்கள் மற்றும் அவை உருவாக்கப்பட்ட விதம் குறித்து தற்போதைய நீதிபதிகள் மத்தியில் சில மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. குறிப்பாக, இத்தகைய முக்கியமான வழிகாட்டுதல்களை வெளியிடும் முன், அனைத்து நீதிபதிகளின் கருத்துக்களையும் உள்ளடக்கிய ‘முழு நீதிமன்ற’ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
முந்தைய கையேட்டில் இடம்பெற்றிருந்த சில விளக்கங்கள் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை ஒட்டுமொத்தமாகச் சுட்டிக்காட்டுவது போல் இருப்பதாகக் கருதப்படுகிறது. உதாரணமாக, “மேல்தட்டு சாதி ஆண்கள், ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் மீது பாலியல் வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர்” என்ற பொதுவான கூற்றுக்கள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே குறிவைப்பது போல் அமைந்திருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய மிகப்பொதுவான கருத்துக்களைத் தவிர்த்து, எதார்த்தமான மற்றும் நடுநிலையான அணுகுமுறையை நீதிமன்றம் கொண்டிருக்க வேண்டும் என்பதே தற்போதைய அமர்வின் நோக்கமாக உள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தலில், சட்டக் குறிப்புகள் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டுச் சட்டங்கள் அல்லது கடினமான ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து, இந்திய சமூகத்தின் விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் எதார்த்த வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் இந்த புதிய கையேடு அமைய வேண்டும் என்று நீதிபதிகள் விரும்புகின்றனர். நிபுணர் குழு தயாரிக்கும் இந்த புதிய வழிகாட்டுதல்கள், அனைத்து நீதிபதிகளின் ஆலோசனைக்குப் பிறகே இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






