எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் தி.மு.க-வுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு..!
ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மருது சகோதரர்கள் 224-வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சிவகங்கையில் காளையார் கோவில் எதிரே உள்ள மருது சகோதரர்களின் நினைவிடத்தில் அமைந்துள்ள அவர்களது திருவுருவச் சிலைகளுக்கு திங்கள்கிழமை வெள்ளிக் கலசம் வழங்கி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: “வீரத்திற்கு உதாரணமாக விளங்கி, ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக போராடி வீர மரணம் அடைந்த மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 224-வது குருபூஜையினை முன்னிட்டு, அவர்களின் தியாகத்தையும், வீரத்தையும் நினைவுகூரும் வகையில் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு வெள்ளிக்கவசம் வழங்கி மரியாதை செலுத்தினேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மருது சகோதரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம், “தமிழ்நாட்டில் தி.மு.க மீண்டும் ஒருமுறை ஆட்சி அமைக்கும்” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதற்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “இன்றைக்கு சூழ்நிலையில் எல்லாக் கட்சிகளும் பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க பிரிந்து கிடக்கிறது. பா.ம.க-வில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் சண்டை. இப்படி இருக்கிற சூழ்நிலையில், அவர்களுக்குதானே (தி.மு.க) வாய்ப்பு இருக்கிறது. கண்கூடாகத்தானே தெரிகிறது.
தி.மு.க-வுக்கு ஏன் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்ல வேண்டும். எல்லா எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடக்கிறது. பிரிந்து கிடக்கும்போது, அவர்களுக்கு (தி.மு.க) வாய்ப்பு இருக்கிறது என்று பொதுமக்கள் பேசுகிறார்கள். நான் பேசவில்லை.” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் 2026-ல் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சிகள் எல்லாம் பிரிந்து கிடப்பதால், தி.மு.க-வுக்கு மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என பொதுமக்கள் பேசுகிறார்கள் என்று கூறியிருப்பது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.





