திமுகவில் துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க வேண்டுமாம்…! பாஜகவுடன் சசிகலா, ரஜினி கூட்டணி…! மீண்டும் குட்டையை குழப்பும் சு.சாமி!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்க வேண்டும். துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்கினால் நல்லது. பாஜகவுடன் கூட்டணி சேர சசிகலா, ரஜினி ஆகியோருடன் கூட்டணிப் பேச்சு நடத்தத் தயார் என்றெல்லாம் கூறி தமிழக அரசியலில் மீண்டும் குட்டையை குழப்ப சுப்பிரமணிய சாமி களத்தில் குதித்துள்ளார்.
இந்திய அரசியலில் துணிந்து தனது அதிரடி கருத்துக்களை கூறி திடீர் திடீரென சர்ச்சைகளை கிளப்புவதில் கில்லாடி என்றால் அது சுப்பிரமணிய சாமி தான். இவர் கூறும் சில கருத்துகள் சில நேரங்களில் நகைச்சுவையாகவும் பார்க்கப்படும். தற்போது பாஜகவில் இருக்கும் சுப்பிரமணியசாமி, அக்கட்சியை அடிக்கடி வசை பாடுவதும் உண்டு. பிரதமர் மோடி முதல் அத்தனை பேரையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கவும் செய்வார்.
அதே போன்று வேண்டப்படாத எதிர்க்கட்சி தலைவர்கள் மீது லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, வழக்கு வம்பு தும்பு இழுப்பதிலும் கில்லாடி தான் சு.சாமி. ஜெயலலிதா மீது முதலில் ஊழல் வழக்கு போட்ட சு.சாமி, காங்கிரசின் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் மீதும் வழக்கு போட்டவர்.

சுப்பிரமணிய சாமிக்கு தமிழக அரசியல் மீது எப்போதுமே ஒரு கண் உண்டு. 1996-ல் ஜனதாக் கட்சி பெயரில் தமிழகத்தில் காலூன்றப் பார்த்தார். ஆனால் நிறைவேறவில்லை. இருந்தாலும் அவ்வப்போது தமிழக அரசியலில் சிண்டு முடிவது, சீண்டிப் பார்ப்பது என சித்து வேலை செய்து சர்ச்சைகளை ஏற்படுத்துவதை தொடரவே செய்கிறார். இப்போதும் சட்டசபை பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் இப்போதே தனது சித்து வேலையை தொடங்கி விட்டதாக தெரிகிறது.
அப்படித்தான் பிரபல தமிழ் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் சு.சாமி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகி பரபரப்பாகியுள்ளது. அதிலும் திமுக கட்சி விவகாரத்துக்குள் மூக்கை நுழைத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திமுகவில் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கூட்டணியான காங்கிரசின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி முதல் வைகோ அத்தனை கூட்டணி கட்சித் தலைவர்களும் கூட மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று உரத்து கூறி வருகின்றனர்.
“முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினின் மனைவி துர்கா”
ஆனால் சுப்பிரமணிய சாமி கூறியது என்ன தெரியுமா? மு.க.ஸ்டாலின் ஓய்வெடுத்தால் நல்லது. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் நல்லதாம். இதற்கு துர்கா ஸ்டாலினுக்கு என்ன தகுதி ? என்பதற்கு, அவர் வெளிப்படையாக கோவிலுக்கு செல்வதும், நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்திருப்பதும் தான் என சு.சாமி கூறி திமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கட்சிக்கும் துர்கா ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில், சு.சாமி இப்படி வேண்டாத கருத்தை கூறியிருப்பது சு.சாமிக்கு தேவையில்லாத வேலை என்று திமுகவினரே கொந்தளிக்கின்றனர்.
இது மட்டுமில்லாது சசிகலா வெளியில் வந்தவுடன் அதிமுக.பலம் பெறும். அதிமுகவில் பலரும் அவர் பின்னால் தான் செல்வார்கள். ஜெயலலிதா காலம் முதலே கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டியவர் சசிகலா தான். ஜெயலலிதா ஆட்சியில்தான் கவனம் செலுத்தினார்.
எனவே சசிகலா அதிமுகவில் மீண்டும் செல்வாக்கு பெறுவார், பாஜக சம்மதித்தால் சசிகலாவுடனும், ரஜினியுடனும் கூட்டணி பேச்சு நடத்த தயாராக உள்ளேன் என்றெல்லாம் சு.சாமி பேட்டியில் கூறி தமிழக அரசியல் களத்தில் குட்டையை குழப்ப கிளம்பியுள்ளார்.








