--- --:--:-- --

வெளியானது திமுக, அதிமுக பட்டியல்! * கொளத்தூரில் ஸ்டாலின்.. * எடப்பாடியில் பழனிசாமி! * திருப்பூரில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.. * எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு வாய்ப்பு!

fxgfghf

ட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலை திமுக, அதிமுக வெளியிட்டுள்ளன. கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் மீண்டும் களமிறங்குகின்றனர். திமுக மட்டும் 164 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியினர் 11 இடங்கள் என மொத்தம் 175 இடங்களில் உதயசூரியன் சின்னம் களமிறங்குகிறது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போது உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. தமிழகத்தின் இரு பெரும் துருவங்களான திமுகவும் அதிமுகவும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் கோதாவில் குதித்துள்ளன. இந்தப் பட்டியலில் திக் திக் நிமிடங்களுக்குப் பஞ்சமில்லை. மீண்டும் தன் ‘கோட்டை’யான கொளத்தூரிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் களம் காண்கிறார். கடந்த சில தேர்தல்களாகத் தன்னைத் தழுவிக்கொண்ட கொளத்தூர் மக்கள் மீது அவர் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது காட்டுகிறது.

 

மறுபுறம், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த மண்ணான எடப்பாடி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார். தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களும் தங்களது கோட்டைகளைத் தக்கவைக்கக் களமிறங்கியிருப்பது, இந்தத் தேர்தலின் ஆகச்சிறந்த தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. எடப்பாடியை எதிர்த்து திமுக சார்பில் காசி களமிறங்கி உள்ளார்.

 

வாரிசுகளும்… வழிவிட்ட சீனியர்களும்!

திமுக இம்முறை கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறது. இதில் திமுக மட்டும் நேரடியாக 164 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை வழக்கம் போலச் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலேயே நிறுத்தியுள்ளார்.

 

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், உடல்நிலையைக் காரணம் காட்டி ஒதுங்கிவிடுவார் என்று பேசப்பட்ட சீனியர் புள்ளி துரைமுருகனுக்கு மீண்டும் காட்பாடியிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர்கள் பொன்முடி மற்றும் ஆர்.காந்தி ஆகியோருக்குப் பதிலாக அவர்களது மகன்களான கௌதம சிகாமணி மற்றும் வினோத் காந்தி ஆகியோருக்கு வாய்ப்பளித்து, வாரிசு அரசியலையும் புது இரத்தத்தையும் சமன் செய்ய முயன்றுள்ளது திமுக தலைமை.

 

இரட்டை இலையின் அதிரடி வேட்பாளர்கள்!

 

அதிமுகவைப் பொறுத்தவரை 167 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்து, முதற்கட்டமாக 150 வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இதில் 46 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்து எடப்பாடியார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் அமைச்சர்களான டி.ஜெயக்குமார் ராயபுரத்திலும், கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளியிலும், நத்தம் விசுவநாதன் நத்தம் தொகுதியிலும் மீண்டும் களமிறங்குகின்றனர். குறிப்பாக, திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில் குமார் நிறுத்தப்பட்டிருப்பது திண்டுக்கல் மண்டலத்தில் அனலைத் தெறிக்கவிட்டுள்ளது. லட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் லால்குடியில் அதிமுக சார்பில் போட்டியிடுவது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

மேற்கு மண்டலத்தில் யார் கை ஓங்கும்?

 

மேற்கு மண்டலமான கொங்கு பெல்ட்டில் திமுகவும் அதிமுகவும் மிகக் கவனமாகத் தங்களது காய்களை நகர்த்தியுள்ளன. திருப்பூர் தெற்கில் திமுக சார்பில் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் களமிறக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் திமுக சார்பில் ஜெயராமகிருஷ்ணன் (மடத்துக்குளம்), மு.ஜெயகுமார் (உடுமலைப்பேட்டை), க.செல்வராஜ் (பல்லடம்), சாமிநாதன் (காங்கேயம்), இந்திராணி (தாராபுரம்) மற்றும் டாக்டர் கோகிலா மணி (அவினாசி) ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு தொகுதியில் எம்.எஸ்.எம். ஆனந்தன், பல்லடத்தில் கே.பி.பரமசிவம், உடுமலைப்பேட்டையில் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, திமுகவின் நட்சத்திர வேட்பாளராக செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் நிற்கிறார். அவரை எதிர்த்து அதிமுகவின் அம்மன் அர்ச்சுணன் களம் காண்கிறார்.

இது தவிர திமுக சார்பில் சுதாகர் (வால்பாறை), சபரி கார்த்திகேயன் (கிணத்துக்கடவு), என்.ஆர்.கார்த்திகேயன் (தொண்டாமுத்தூர்), செந்தமிழ்ச்செல்வன் (கோவை வடக்கு), தளபதி முருகேசன் (சூலூர்) மற்றும் கவிதா கல்யாணசுந்தரம் (மேட்டுப்பாளையம்) ஆகியோர் மோதுகின்றனர். அதிமுகவோ ஓ.கே.சின்னராஜ் (மேட்டுப்பாளையம்), அருண்குமார் (கவுண்டம்பாளையம்), கே.ஆர்.ஜெயராம் (சிங்காநல்லூர்), தாமோதரன் (கிணத்துக்கடவு), பொள்ளாச்சி ஜெயராமன் (பொள்ளாச்சி) மற்றும் லட்சுமண சிங் (வால்பாறை) ஆகியோரை நிறுத்திப் பலப்பரீட்சை நடத்துகிறது.

 

தவெகவின் வருகையால் திமுகவின் ‘புரட்சிகர’ மாற்றம்!

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வேளச்சேரியை மட்டும் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, மீதமுள்ள 15 தொகுதிகளில் திமுகவே நேரடியாகப் போட்டியிடுகிறது. இது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகையைச் சமாளிப்பதற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

 

சென்னையில் 6 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்குக் கல்தா கொடுத்துவிட்டுப் புதிய முகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது திமுக. குறிப்பாக மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு தி.நகரிலும், அண்ணா நகர் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பூரில் விஜய்யை எதிர்கொள்ள ஆர்.டி.சேகர் மூன்றாவது முறையாகக் களமிறக்கப்பட்டுள்ளார்.


வேட்பாளர் பட்டியலில் பெண்களின் பங்கு!

 

தேர்தல் அரசியலில் பெண்களின் பங்களிப்பு இம்முறை இரு கட்சிகளிலுமே கூர்ந்து கவனிக்கப்படுகிறது. திமுக சார்பில் 18 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதில் கீதா ஜீவன் (தூத்துக்குடி), கீதா ஆனந்தன் (பரமக்குடி), ஆ.தமிழரசி (மானாமதுரை), கோகிலா மணி (அவினாசி), இந்திராணி (தாராபுரம்) போன்றோர் முக்கியமானவர்கள்.

அதிமுக சார்பில் 17 பெண்கள் போட்டியிடுகின்றனர். இதில் பி.சத்தியபாமா (தாராபுரம்) மற்றும் லீமா ரோஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். சமூக நீதி மற்றும் சமத்துவத்தைப் பேசும் கட்சிகள், வேட்பாளர் எண்ணிக்கையில் பெண்களுக்கான வாய்ப்புகளை இன்னும் அதிகரித்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், களமிறங்கியுள்ள பெண் வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் கடும் சவால்களைக் கொடுக்கத் தயாராகிவிட்டனர்.


குவாரி விவகாரத்தால் வாய்ப்பிழந்த எம்.எல்.ஏ.

 

தேர்தல் களத்தில் சுவாரஸ்யங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் என்றும் பஞ்சமிருக்காது. ஆண்டிபட்டியில் திமுக சார்பில் அண்ணன் மகாராஜனும், அதிமுக சார்பில் தம்பி லோகிராஜனும் மோதிக்கொள்கின்றனர். இது இவர்கள் இருவருக்கும் இடையிலான மூன்றாவது நேருக்கு நேர் மோதல்.

அதேபோல், ஸ்ரீரங்கம் தொகுதியில் சர்ச்சையில் சிக்கிய சிட்டிங் எம்.எல்.ஏ பழனியாண்டிக்கு திமுக இம்முறை வாய்ப்பு வழங்கவில்லை. இது கட்சியினரிடையே ஒருவித ஒழுங்கு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

 

மேலும், திமுக மற்றும் அதிமுகவில் பெரும்பாலான அமைச்சர்கள் மீண்டும் அந்தந்த தொகுதிகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளனர். மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், திருச்சி மேற்கில் கே.என்.நேரு, திருவண்ணாமலையில் ஏ.வா.வேலு ஆகியோர் மீண்டும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தத் தயாராகிவிட்டனர்.

 

கூட்டணி கணக்குகள்: யாருக்கு எத்தனை இடங்கள்?

 

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை, பத்மநாபபுரம், பழனி மற்றும் திருவொற்றியூர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர் மற்றும் சீர்காழி ஆகிய 4 தொகுதிகள் தனிச் சின்னத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாபநாசம் மற்றும் வாணியம்பாடியில் போட்டியிடுகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி போன்றவை உதயசூரியன் சின்னத்திலேயே களம் காண்கின்றன.

மறுபுறம் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு விருத்தாசலம் (பிரேமலதா), விருதுநகர் (விஜய பிரபாகரன்) உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

இறுதியாக, அதிமுக மற்றும் திமுக நேரடியாக 121 தொகுதிகளில் மோதுகின்றன. அதிமுக- இந்திய கம்யூ. 4 இடங்கள், விசிக – அதிமுக 5 இடங்கள், விசிக – பாமக 2 இடங்களில் மோதுகின்றன. அதிமுக – மார்க்ஸிஸ்ட் 2 இடங்களிலும், அதிமுக- காங்கிரஸ் 18 இடங்களிலும், காங்கிரஸ் – பாஜக 4 இடங்களிலும், திமுக- தமாகா 4 இடங்களிலும், தேமுதிக – பாமக 4 இடங்களில் மோதுகின்றன.

 

4 மேயர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு!

 

திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ந.தினேஷ்குமார் திருப்பூர் மாநகராட்சியின் மேயராக உள்ளார். தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சண்.ராமநாதன் தஞ்சை மாநகராட்சி மேயராக உள்ளார். ஒசூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்யா, ஓசூர் மாநகராட்சி மேயராக உள்ளார். முதல் வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட ரெ.மகேஷ் நாகர்கோவில் மாநகராட்சி மேயாராக உள்ளார்.

திமுக பட்டியலில் 125 பட்டதாரிகள், 15 மருத்துவர்கள், 17 பொறியாளர்கள் எனப் படித்த வேட்பாளர்களை திமுக களமிறக்கியுள்ள நிலையில், 33 பட்டதாரிகள் மற்றும் 23 வழக்கறிஞர்களுடன் அதிமுக மல்லுக்கட்டுகிறது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் அந்த நாளுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்!

Leave a Reply

Right Menu Icon