--- --:--:-- --

தவெகவில் அதிருப்தி? கட்சி மாற திட்டம் – செங்கோட்டையன்

1

திமுக ஒன்றிணைய வேண்டும் எனப் பொதுவெளியில் குரல் கொடுத்த செங்கோட்டையன், அதன்பின்னர் நடந்த சில சம்பவங்களால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து அந்தக் கட்சியில் இணைந்தார்.
செங்கோட்டையனுக்கு தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

 

தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை அவர் நடத்தினார். தொடர்ந்து, தவெகவின் கிளை அலுவலகங்களைத் திறப்பது, செய்தியாளர் சந்திப்பு என தவெகவில் செங்கோட்டையன் செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், தவெகவில் அவர் கடுமையான புழுக்கத்தில் இருப்பதால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வேறு கட்சிக்குச் செல்லும் யோசனையில் செங்கோட்டையன் இருப்பதாகப் பிரபல செய்தித்தாளில் இன்று செய்திவந்தது.

 

இதற்கு தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். இந்தச் செய்திக்கு விளக்கம் அளித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள செங்கோட்டையன், “புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்தவன் நான். சோதனை ஏற்பட்ட போது என்னைக் கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைக்கின்ற அளவிற்கு இன்று என்னை உருவாக்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி என்றும் என் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர்.

 

அவர் 2026 இல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகும் வரை நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மக்கள் செல்வாக்கோடு அவரை ஆட்சி கட்டிலில் அமர வைப்போம். அவருடைய தியாகத்தையும், மனித நேயத்தையும் எவராலும் ஒப்பிட இயலாது. மக்கள் நெஞ்சங்களில் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எங்கள் வாழ்வும், தமிழகத்தின் எதிர்காலமும், அவருடைய தலைமையில் அமையப் போகின்றது.

அதற்காகத்தான் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றி வருகிறோம். நாளிதழில் உண்மைக்கு மாறான செய்தி வெளியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. நடுநிலை என்று சொல்லிக்கொண்டு இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தர்மத்திற்கு உகந்ததல்ல. இந்த செய்தியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon