அன்னதானத்தில் கிடந்த பூரான்.. பக்தரின் வீடியோவுக்கு தேவஸ்தானம் விளக்கம்!
திருப்பதியில் லட்டு சர்ச்சையை தொடர்ந்து அன்னதானத்தில் பூரான் கிடந்தது தொடர்பாக தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது. திருப்பதி மலையில் உள்ள மாதவம் நிலையம் வளாகத்தில் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை பக்தர்களுக்கு வழங்கப்பட்ட இலவச உணவில் பூரான் ஒன்று இறந்து போய் கிடந்ததாக பக்தர் ஒருவர் சுட்டிக்காட்டி தன்னுடைய இலையில் இறந்து போய் கிடந்த பூரானையும் வீடியோ பதிவு செய்து வெளியிட்டிருந்தார். இதையடுத்து இலவச உணவில் இறந்த பூரான் என்ற செய்தி வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுபற்றி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தேவஸ்தான நிர்வாகம், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டு ஒரு நாள் கூட ஏற்பட்டது இல்லை. முழுவதுமாக வேக வைக்கப்பட்ட உணவில் உடல் பாகங்கள் சேதம் அடையாமல் முழு பூரான் சிதையாமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது.
எனவே இது இட்டுக்கட்டப்பட்ட பொய்.தயிர் சாதத்தில் பூரான் கிடந்தது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். முழுவதுமாக வேகவைக்கப்பட்ட சாதத்தில் பூரான் விழுந்திருந்தால் கூட அந்த பூரானின் உடல் பாகங்கள் வெந்து அது சேதம் அடைந்திருக்கும்.
ஆனால் அந்த பூரான் எவ்வித சேதமும் இல்லாமல் இறந்து போய் கிடந்தது. எனவே பக்தர்கள் இந்த இட்டுக்கட்டப்பட்ட பொய்யை நம்ப வேண்டாம் என்று தேவஸ்தானம் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.



