ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி சாதனை! நேரில் சந்தித்து பாராட்டிய நடிகர் விவேக்
சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தவரை நேரில் சந்தித்து நடிகர் விவேக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான மணிகண்டன் என்பவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரி முதல் சென்னை வரை ஒற்றை காலில் மிதி வண்டி ஓட்டினார். கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி குமரியில் தனது பயணத்தை தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி சென்னையில் நிறைவு செய்தார்.
இவரை நடிகர் விவேக் நேரில் சந்தித்து தனது வாழ்த்தினை தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விவேக் 2020 ஆம் ஆண்டு வந்துவிட்டது என்றும், ஆனால் மறைந்த அப்துல் கலாமின் கனவு இன்னும் எட்டப்படவில்லை என்றும் கூறினார்.






