ஐபிஎல்: “தல” தோனியின் சிஎஸ்கேக்கு என்னாச்சு.? 7 போட்டியில் 5-ல் தோல்வி.. அடுத்த 7 போட்டியில் 6-ல் வென்றால் மட்டுமே “பிளே ஆப்” வாய்ப்பு
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாப நிலையில் உள்ளது. இதுரை நடந்த 7 போட்டிகளில் 5-ல் தோல்வியை தழுவியுள்ள சிஎஸ்கே அணி, மீதமுள்ள 7 போட்டிகளில் 6-ல் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மோசமான பார்மில் உள்ள சிஎஸ்கே அணிக்கு இது சாத்தியமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகமானதால் இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் அடுத்தடுத்து தள்ளிப்போனது. கடைசியில் 14 -வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கி நடந்து வருகிறது. மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதியின்றி இந்தப் போட்டிகள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்று விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தத் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதும் சாதிக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பை அறிவித்துள்ள தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடரும் இதுவாகவே இருக்கும் என்பதால், கோப்பையை வென்று தந்து சாதிப்பார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
அதற்கேற்றாற் போல் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வென்று வெற்றிக் கணக்குடன் சி எஸ்கே கெத்து காட்டியது. ஆனால் அதன் பின் தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தி சிஎஸ்கே அணி தோல்வி மேல் தோல்வி என பரிதாபத்துக்கு ஆளாகி வருகிறது. இது வரை ஆடிய 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே வென்று 5 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. ரன் சேஸிங்கில் எப்போதும் சாதிக்கும் சென்னை அணி, இந்த முறை 7 போட்டிகளிலும் சேஸிங் தான் செய்தது. ஆனால் மும்பை, பஞ்சாப் தவிர்த்து அனைத்து அணிகளிடமும் தோல்வியே கண்டுள்ளது. பினிசிங் மன்னன் என பல போட்டிகளில் வெற்றிகளை தேடித் தந்த தோனி, இந்தத் தொடர் முழுக்க சொதப்பபி வருகிறார். நேற்று கூட பெங்களுரு அணிக்கு எதிரான 170 ரன் என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் படுதோல்வி அடைந்தது.
இந்தத் தொடரில் முதல் சுற்றில் அனைத்து அணிகளுடனும் ஆடி முடித்த சென்னை அணி 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இதனால் எஞ்சியுள்ள அடுத்த சுற்றின் 7ஆட்டங்களில் 6-ல் வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு என்ற கட்டாயத்தில் உள்ளது. ஆனால் தொடர்ந்து மோசமாக ஆடி வரும் சிஸ்கே திடீர் எழுச்சி பெற்று சாதிக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போதைய நிலையில், டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.







