காலி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் நடந்தால் இப்படி பிரச்னையா..? ஆஸி., – நியூசி., போட்டியில் அரங்கேறிய கூத்துக்கள்!!
லட்சம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட ஸ்டேடியத்தில், பார்வையாளர் ஒருவர் கூட இல்லாமல் வீரர்கள் மட்டும் கிரிக்கெட் ஆடினால் எப்படி இருக்கும்?. இப்படி முதல் முறையாக நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டியில் பல்வேறு புதுப்புது பிரச்னைகளும், கூத்துகளும் அரங்கேறி , இப்படியெல்லாம் போட்டி நடத்த வேண்டுமா? கேள்வியை எழச் செய்து விட்டது.
கொரானா வைரஸ் அச்சுறுத்தல் எந்தத் துறையையும் விட்டு வைக்கவில்லை. உலக சுகாதார அமைப்பின் வேண்டுகோளை அடுத்து மக்கள் அதிகமாக கூடும் பல்வேறு இடங்களுக்கும் தடை போடப்பட்டுவிட்டது. இதில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், தடைகள் போடப்பட்டு விட்டன. முடிந்தால் போட்டிகளை ரத்து செய்யுங்கள்; இல்லை திட்டமிட்டபடி போட்டியை நடத்துவது என்று வீம்பு பிடித்தால், பார்வையாளர்கள் யாரையுமே அனுமதிக்காமல் மைதானத்தை பூட்டி விட்டு, வீரர்களை மட்டும் விளையாட விட்டு, அதனை படம்பிடித்து டெலிவிஷனில் ஒளிபரப்பிக் கொள்ளுங்கள் என்று பல நாடுகளின் அரசுகளும் உத்தரவிட்டுவிட்டன. இதனால் பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் ரத்தாகியுள்ளன. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டாலும், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான உத்தரவுக்குப் பின், முதல் போட்டியாக, உலக விளையாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாக, பார்வையாளர் எவரும் இன்றி ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டி நடைபெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானம் உலகில் உள்ள பிரம்மாண்ட மற்றும் அழகிய மைதானங்களில் முக்கியமானதாகும். இங்கு ஆஸ்திரேலியா பங்கேற்கும் போட்டி என்றாலே எப்போதும் ஸ்டேடியம் நிரம்பி வழியும். திருவிழா போல் ஆரவாரத்துடன் போட்டியை கண்டு ரசிப்பது வழக்கம்.

இப்படிப்பட்ட சிட்னி மைதானத்தில் நேற்று போட்டி நடைபெற்ற நிலையில், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அந்தப் பகுதியே வெறிச்சோடிக் காணப்பட்டது. மைதானத்திற்குள்ளும் காலரிகள் காலியாகக் கிடக்க பெரும் நிசப்தம். இதனால் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே எப்போதும் களமிறங்கிப் பழகிப் போன வீரர்களுக்கும், நேற்றைய அனுபவம் புது விதமாக அமைந்தது. ரசிகர்களின் விசில் சத்தம், கை தட்டல், கூச்சல், ஆரவாரம் எதுவுன்றி எப்படி ஆடப் போகிறோமோ? என வீரர்களும் உற்சாகமின்றியே களத்தில் இறங்கினர்.
அதன் பின் ஆட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை, கொரானா பீதியாலும், ரசிகர்கள் இல்லாமலும் ஒரு போட்டி நடத்தினால் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது போகப் போகத்தான் வீரர்களுக்கு தெரிய வந்தது.முதலில் டாஸ் போட்டார்கள். எப்போதும் டாஸ் போடும் முன் அம்பயர்களுடன் இரு அணி கேப்டன்களும் கை குலுக்குவது வழக்கம். ஆனால் இம்முறை படுஜாக்கிரதையாக சற்று தூர நின்று சைகையால் ஹாய் சொன்னார்கள். அதே போல் இரு அணி கேப்டன்களும் கை குலுக்காமல் முஷ்டியால் முட்டினர்.
எந்த ஆரவாரம் இன்றி அந்தக் காலத்தில் ஊமைப் படம் என்பார்களே அது போல் போட்டி தொடங்கியது. முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச்சும் அதிரடி வீரர் வார்னரும் பேட்டிங் செய்தனர்.கடும் நிசப்தத்திற்கு இடையே மைதானத்தில் பந்து பேட்டில் படும் சத்தம் தான் கேட்டது. இருவரும் பவுண்டரிகளாக விளாசும் வரை ஆட்டம் அமைதியாக பிரச்னையின்றி சென்றது. 19வது ஓவரை ஸோதி பந்தில் பிஞ்ச் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். அது காலியாக கிடந்த பார்வையாளர் கேலரியில் விழுந்தது. அப்போதுதான் இப்படியும் ஒரு பிரச்னை வரும் என்று தெரிந்தது. பொதுவாக சிக்சர்கள் பறந்தால் பார்வையாளர்கள் தான் பீல்டர்கள். போட்டி போட்டு பந்தை கேட்ச் செய்து பந்தா காட்டுவார்கள். பந்தை மைதானத்தில் வீசியெறிவார்கள். இப்போது தான் யாரும் இல்லையே? நியூசி. கேப்டன் வில்லியம்சன் சக வீரர் பெர்குசனை பந்தை எடுத்து வருமாறு கட்டளையிட்டார். அவரும் தடுப்புகளை தாண்டிக் குதித்து சேர்களுக்கு இடையே சிரமப்பட்டு குனிந்து குனிந்து பந்தை தேடு தேடு என தேடி ஒரு வழியாக கண்டுபிடித்தார். இப்படி சிக்சர் அடிக்கும் போதெல்லாம் பந்தை கண்டுபிடித்து எடுக்கவே ரொம்ப நேரம் வீணானது.

ஆரவாரமே இல்லாமல் போட்டி நடந்ததால், வார்னர் தான் அரைசதம் கடந்ததைக் கூட அறியாமல் விட்டு விட்டார். எப்போதும் வீரர்கள் அரைசதம் அடிக்கும் போது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டுவதும், அதற்கு வீரர்கள் பேட்டை உயர்த்திக் காட்டி நன்றி சொல்வதும் வழக்கம். இப்போது தான் ரசிகர்கள் இல்லையே? அதனால், பெவிலியனில் இருந்த சக வீரர்கள், அரைசதம் கடந்ததை வார்னரிடம் சைகையால் உணர்த்திய பின்னரே ஓஹோ என புரிந்து கொண்டு, வெறும் காலரியை பார்த்து உற்சாகமின்றி பேட்டை உயர்த்தினார்.
இதே போன்று விக்கெட்டுகள் வீழ்த்தும் போது வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகளால் தட்டி பாராட்டிக் கொள்வர். ஆனால் மைதானத்தில் வீரர்கள் ஒருவரை ஒருவர் மறந்தும் கூட தொட்டுக்கொள்ளாமல் பார்த்துக் கொண்டனர். இப்படியாக பார்வையாளர்கள் இல்லாமலும், கொரானா பீதியாலும் ஒரு போட்டி நடந்தால் என்னென்ன புதுப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது இந்த முதல் போட்டியிலேயே தெரிந்து விட்டது. இதனால் இனிமேலும் இப்படி பார்வையாளர் இல்லாமல் போட்டி நடத்துவது தேவைதானா? என்ற சிந்தனையும் போட்டி நடத்துபவர்களுக்கும், வீரர்களுக்கும் வந்துள்ளதாகவும் தெரிகிறது. எல்லாம் கொரானா படுத்தும் பாடு. எப்போதான் கொரானா பிரச்னை ஒழியுமோ? தெரியவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





