கைக்குழந்தையுடன் நடந்தே ஊருக்கு செல்லும் தம்பதிக்கு இடையில் நேர்ந்த சம்பவம்!
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இருந்து விசைத்தறி கூலி தொழிலாளர்கள் சிலர் வறுமையின் காரணமாக சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் காட்சி கல் நெஞ்சையும் கரைத்த தாக உள்ளது.கையில் குழந்தை, வார் அறுந்த காலணிகள் வாட்டும் வெயிலில் வாட்டமற்ற மனத்துடன் நடந்து செல்லும் இந்த தம்பதி கோவை கருமத்தம்பட்டி அடுத்த முத்து கவுண்டன் புதூரில் நான்காண்டுகளுக்கு மேலாக விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு உள்ளார்கள்.
இவர்களைப் போலவே இங்கு 40க்கும் அதிகமானோர் விசைத்தறி தொழிலில் உள்ளனர். ஊரடங்கால் வேலையில்லாமல் கையில் பணமின்றி கடன்சுமை அதிகரித்ததால் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு நடந்தே செல்ல முடிவெடுத்தனர். அங்கிருந்து கிளம்பி மதிய நேரத்தில் திருப்பூர் வந்த தொழிலாளர்கள் காங்கேயம் நோக்கி நடந்து சென்றனர்.
அப்போதுதான் செருப்பு அறுந்து போய் இந்த தம்பதி மட்டும் பின்தங்கி விட்டனர். மேற்கொண்டு நடக்க முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் அவர்களுக்கு உணவும் புதிய செருப்பும் அளித்து உதவியுள்ளனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவருக்கு பாஸ் வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






