--- --:--:-- --

திருப்பதிக்கே லட்டா? திருப்பூருக்கே வேட்டா? ஆளுங்கட்சி பிரமுகருக்கு வரிச்சலுகை தாராளம்! அதிகாரிகளால் வருவாய் இழப்பு ஏராளம்!!

News exclusive

திருப்பூரில் ஆளுங்கட்சி பிரமுகரின் லாட்ஜுக்கு வரிவிதிப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் சலுகை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகளின் இத்தகைய விஸ்வாசத்தால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

 

சட்டமும் சரி, வரி விதிப்பும் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளோ, வரிவிதிப்பில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை காட்டுவதாக குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது. குறிப்பாக, ஆளுங்கட்சி பிரமுகர்களின் தயவு வேண்டும் என்பதற்காக, அவர்கள் விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தாராளமாக நடந்து கொள்வதாக பரவலாக புகார் உள்ளது.

 

வணிக வரிக்கு பதில் வீட்டுவரி!

திருப்பூரில் அன்பான பெயரில், ரெசிடென்ஸி நடத்தி வருகிறார் அந்த ஆளுங்கட்சி பிரமுகர். அவரது விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள், ரொம்பவே கரிசனம் காட்டுவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் நடத்தி வருவதோ, ஆடம்பரமான சொகுசு விடுதி. இதற்கு நியாயப்படி பார்த்தால், வணிகவரி விதிக்க வேண்டும்.

 

ஆனால், நம் மாநகராட்சி அதிகாரிகள், அவர் மீது கொண்டுள்ள விஸ்வாசத்தை காட்டுவதற்காக, அவரது  சொகுசு விடுதியை, வீடு என்ற வகைப்பாட்டில் மாற்றி, வணிகவரிக்கு பதிலாக வீட்டுவரியை வசூலித்து வருகின்றனர். இது தொடர்பாக, திருப்பூரில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மாநகராட்சியிடம் கேள்வி கேட்ட பிறகே, இந்த முறைகேடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு என்ன ஆதாயம்?

 

பரபரப்பான திருப்பூரில் மத்திய பகுதியில், நொய்யல் கரையோரம் கஜலட்சுமி தியேட்டர் ரோட்டில் தான் அந்த விடுதி உள்ளது. குடியிருப்புகளே இல்லாத வணிக நிறுவனங்கள், கடைகளே உள்ள அப்பகுதியில், அந்த கட்டிடத்திற்கு மட்டும் அதிகாரிகள் எப்படி வீடு என்று வரையறை செய்து, வீட்டு வரியை வசூல் செய்திருக்கிறார்கள்? இதனால், அதிகாரிகளுக்கு கிடைக்கும் ஆதாயம் என்ன? ஆளுங்கட்சி பிரமுகர் என்றால் வரிச்சலுகை காட்டலாம் என்று சட்டம் சொல்கிறதா என்று, பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

 

ஏழுமலையான் பெயரை கொண்ட அந்த ஆளுங்கட்சி பிரமுகர், கட்சியில் தனக்கென ஒரு செல்வாக்கை வைத்திருப்பவர். எம்.எல்.ஏ. ஒருவர் நெருக்கமானவர். விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த பிரமுகர், நாளையே மாமன்ற மேயராக கூட ஆகலாம். அப்படியானால், அவரது தயவு தேவைப்படலாம் என்பதால் மாநகராட்சி நிர்வாகம், இப்படி “பெருந்தன்மையை” காட்டுகிறதோ என்று, எதிர்த்தரப்பினர் பேசிக் கொள்கிறார்கள்.

 

திருப்பூர் கஜலட்சுமி தியேட்டர் அருகில் நொய்யல் ஆற்றங்கரை ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளாக மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த சுமார் 100 பேர் வசித்து வந்தனர். அண்ணாந்து பார்க்கும் மாளிகைக்கு அருகே, ஓலைக்குடிசை இருந்தால் நன்றாக இருக்குமா? உடனே தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில், அங்கு வசித்த அப்பாவி குடும்பங்களை, முறையான அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிக்கு விரட்டினர்.

 

இப்போது, வரிவிதிப்பிலும் ஆளுங்கட்சி பிரமுகரை மாநகராட்சி திருப்தி செய்து வருவது, பலருக்கும் அதிருப்தியை தருகிறது. திருப்பூரில் இது போல் எத்தனை கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வணிக வரிக்கு பதில் வீட்டு வரியை விதிக்கிறார்களோ?

 

சந்தேகம் கிளப்பும் சமூக ஆர்வலர்கள்

 

இதெல்லாம், அந்த திருப்பதி பெருமாளுக்கே வெளிச்சம் என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தை கிளப்புகிறார்கள். பணத்தில் புரளும் ஆளுங்கட்சி பிரமுகருக்கே, வணிகவரிக்கு பதில் வீட்டுவரி வசூலித்து பணத்தை மிச்சப்படுத்துவது, திருப்பதிக்கே லட்டு தர முற்படுவது போல் உள்ளதாக பேசிக் கொள்கிறார்கள்.

 

இதுபோன்ற அதிகாரிகளால், ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு லாபம்; அரசுக்கு வருவாய் இழப்பு உண்டாகிறது. இனியேனும் அதிகாரிகள் இதில் பாரபட்சம் காட்டக்கூடாது; அனைத்து கட்டிடங்களுக்கும் அதற்கேற்ற உரிய வரியை வசூலிக்க வேண்டும் என்பதே திருப்பூர்பகுதி சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

கைகாட்டி ஒதுங்கும் அதிகாரிகள்!

திருப்பூா் மாநகராட்சி 3-வது மண்டல உதவி ஆணையர் சஃபி

வணிக நிறுவனத்திற்கு வீட்டுவரி வசூலிப்பது பற்றி கருத்தை அறிய மாநகராட்சி 3வது மண்டல உதவி ஆணையர் சஃபியை, குற்றம் குற்றமே இதழ் சார்பில் தொடர்பு கொண்டோம். அவர், பழைய கட்டிடத்தின் பெயரில் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. புதிய கட்டிடத்தின் பெயரில் வரி வசூலிக்கவில்லை. இதுபற்றி நீங்கள் ஆர்.ஐ. சத்தியசீலனை 99440 09788 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று கேட்டு, அவரை கைக்காட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

 

அவர் அளித்த எண்ணில், ஆர். ஐ. சத்தியசீலனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது பில் கலெக்டர் அருண் என்பவரை 94452 05786 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளுங்கள்; அல்லது அலுவலகத்திற்கு நேரில் வாருங்கள் “பேசிக்” கொள்ளலாம் என்றார்.

 

இதை தொடர்ந்து பில் கலெக்டர் அருணை தொடர்பு கொண்டோம். அவர், இது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியவில்லை. இப்போது வரிவசூல் நடப்பதால், பதில் சொல்லும் நிலையில் இல்லை.  அந்த கட்டிடத்திற்கு வணிக வரிதான் விதிக்கப்பட வேண்டும். வரிவிதிப்பு மாறுவதற்கு வாய்ப்பு குறைவு. மாறியிருந்தால் எப்படி மாறியது என்று பார்க்க வேண்டும் என்று கூறி நழுவினார்.

 

மொத்தத்தில் அதிகாரிகள் ஒவ்வொருவரும் இதற்கு பொறுப்பேற்க முன்வராமல், அடுத்தவரை கைகாட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்வதில்தான் கவனமாக இருந்தனர்.

 

(வரி இனங்கள் பட்டியலுடன் மேலும் கூடுதல் தகவல்களை, வரும்  குற்றம் குற்றமே இதழை புரட்டிப் பாா்த்தால் புரியும்).

Leave a Reply

Right Menu Icon