கொரோனா பாதித்தவரின் எதிர்வீட்டில் வசித்த குடும்பத்திற்கும் கொரோனா தொற்று உறுதி!
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 மாத குழந்தை உட்பட 4 பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. காளப்பநாயக்கன்பட்டி யை சேர்ந்த இளைஞருக்கு கடந்த 21ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் மாமனாருக்கும் வைரஸ் பரவியது.
இதனால் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சுகாதாரத்துறையினர் பரிசோதனை நடத்தினர். அதில் அந்த இளைஞரின் எதிர் வீட்டில் வசிக்கும் 6 மாத குழந்தை உட்பட 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே காளப்பநாயக்கன்பட்டி பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு சேந்தமங்கலம் ராசிபுரம் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. சென்னையில் பணியாற்றிய அந்த இளைஞர் மூலம் 7 பேருக்கு கொரொனா பரவியுள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு ஹாட் ஸ்பாட்டாக காளப்பநாயக்கன்பட்டி மாறி வருகிறது என்றால் மக்களிடையே எழுந்துள்ளது.
இதேபோல் கொரொனா பாதிப்படைந்த குழந்தை ஒன்று தொற்றிலிருந்து மீண்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமான சண்டிகரில் கொரொனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 11 மாத குழந்தை மற்றும் அவரது தாயையும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி கரவொலி எழுப்பி அனுப்பிவைத்தனர். குழந்தை,அவரது தாய், பாட்டி உள்ளிட்டோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்றாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது குழந்தையும், தாயும் குணம் அடைந்ததை அடுத்து அவர்களை மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.







