14 ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் இயக்குனராகும் சமயத்தில் தடையாய் வந்த கொரொனா!
திரைத் துறையில் சாதனை புரிய வேண்டும் என்பது பலரது கனவாகும். ஆயிரம் பேர் இயக்குனராக சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் 10 பேருக்கு மட்டுமே படத்தை இயக்கும் வாய்ப்பு கிட்டுவதுண்டு. அப்படி பல சோதனைகளை கடந்து சாதிக்க காத்திருந்த ஒருவருக்கு தற்போது கொரொனாவால் அந்த வாய்ப்பு தள்ளி போய் உள்ளது.
திரைத்துறையில் இயக்குனராக சாதிக்க வேண்டும் என்று போராடி கொண்டிருக்கும் பாக்கியராஜ் தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே சினிமா துறையை தேர்வு செய்ததாக கூறுகிறார். சினிமா விருப்பத்தை பெற்றோரிடம் வெளிப்படுத்திய போது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். எந்தவித உதவியும் இவருக்குக் கிடைக்கவில்லை.
உதவி இயக்குனராக சேருவதற்கு பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்து பல அவமானங்களை சந்தித்ததாகவும் கூறுகிறார் பாக்யராஜ். ஒரு பெரிய இயக்குனரிடம் உதவியாளராக இருந்தாலும் தனியே படம் இயக்க வாய்ப்பு கிடைக்கும் வரை சொந்த ஊரில் பெரிய மதிப்பு எதுவும் கிடையாது எனவும் வேதனையை வெளிப்படுத்தினார்.
உதவி இயக்குனர்கள் நல்ல உடை அணிவது கூட பலருக்கு பிடிக்காது என்று திரைத் துறையில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை கூறி மனம் வெதும்புகிறார் பாக்கியராஜ். இது ஒரு புறமிருக்க உதவி இயக்குனராக இருந்து கொண்டு திருமணம் செய்து குடும்பம் நடத்துவதும் பெரிய சிரமம் என்கிறார் பாக்கியராஜ்.
உதவி இயக்குனராக 14 ஆண்டுகள் பல அவமானங்களை கடந்து திரைப்படம் இயக்கும் வாய்ப்பு பெற்ற இவரின் பயணத்திற்கு குறுக்கே வந்துள்ளது கொரொனா. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் இன்னல்கள் இருந்தாலும் தடைகள் ஏற்பட்டாலும் விடாமல் போராடி சினிமாத்துறையில் இயக்குனராக சாதிப்பேன் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் பாக்யராஜ்.






