சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரொனா தடுப்பூசியின் விலை 10,800..!
உலகில் கொரொனா வைரஸ் பரவ காரணமான வுகான் நகரம் அமைந்துள்ள சீன நாட்டிலும் வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசியின் விலை 10 ஆயிரத்து 800 ரூபாய் என்று சீனா அறிவித்துள்ளது.
கொரொனா வைரசுக்கு உலகின் பல நாடுகளும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மருந்து ஒன்றை கண்டுபிடித்து பதிவு செய்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா கண்டுபிடித்துள்ள மருந்து உற்பத்தியை தொடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சீனாவும் கொரொனா வைரசுக்கு ஏடி5 என்சிஓ என்ற மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளது. சீன அரசுக்கு சொந்தமான சினோ ஃபார்ம் நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் லீசிங் தானே இருமுறை இந்த ஊசியை போட்டுக் கொண்டு உள்ளதாகவும் எந்த பக்கவிளைவும் இல்லை என்று கூறியுள்ளார்.
இரண்டு தவணையாக இந்த ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும். முதல் ஊசி செலுத்தி கொண்ட பிறகு 28 நாள் கழித்து அடுத்த ஊசி போட்டுக்கொள்ளவேண்டும். முதல் ஊசி செலுத்தியதும் 97 சதவீத பாதுகாப்பு கிடைத்து விடுமாம். ஊசி செலுத்தப்பட்ட முதலே உடனடியாக உடலில் ஆன்டிபாடிகள் அதிகரிக்க தொடங்கி விடும் என்கிறார்கள்.
இரண்டாவது முறையும் ஊசி போட்டுக் கொண்டால் 100 சதவீத பாதுகாப்பு கிடைத்து விடுமாம். விதிவிலக்காக சிலருக்கு ஒரே சமயத்தில் இரண்டு கையிலும் சேர்த்து இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் நான்கு மில்லிகிராம் மருந்தை உடலுக்குள் செலுத்தப்படும்.
இரண்டு தடுப்பூசிகளுக்கும் சேர்த்து இந்திய மதிப்பில் 10 ஆயிரத்து 800 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் முதலில் சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு செலுத்தப்படும் என்றும் சினோ ஃபார்ம் நிறுவனம் தெரிவித்துள்ளது.







