தமிழகத்தில் இன்று 5646 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியது !!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. இன்று 5610 பேர் சிகிச்சையில் குணமடைந்த நிலையில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் குறைந்தபாடில்லை. கடந்த 2 மாதங்களாக ஒரே சீரான வேகத்தில் பதிவாகி வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் நேற்று 5546 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் அதிகரித்து 5646 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டி 5 லட்சத்து 97 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 5610 ஆகும்.
இன்று கொரானா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் 67 பேர் ஆவர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9520 ஆகும். சென்னையில் தொற்று பாதிப்பு கூடிக் கொண்டே தான் செல்கிறது. இன்றும் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 1295 ஆக பதிவான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 324 ஆக உயர்ந்துள்ளது.
அதிக பட்சமாக தொற்று பாதிப்பு
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் இன்றும் அதிக பட்சமாக தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்றும் கோவையில் 574 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. அடுத்தபடியாக சேலத்தில் 378, செங்கல்பட்டில் 335, திருவள்ளுரில் 275, தஞ்சையில் 266 பேருக்கு என அதிக பட்சமாக மாவட்டங்களில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.






