தமிழகத்தில் இன்று 5337 பேருக்கு கொரோனா பாதிப்பு..! 76 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று 5337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய உயிரிழப்பு 76 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக கூறப்பட்டாலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகவே பாதிப்பு ஒரே சீரான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது தினசரி பாதிப்பு 5 ஆயிரத்திற்கு மேலாகவும், உயிரிழப்பு சராசரியாக நூறு என்ற அளவிலும் பதிவாகி வருகிறது.
அதன்படி, இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று 5337 பேருக்கு கெரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது. இன்று தொற்று பாதிப்பு காரணமாக 76 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 8947 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 989 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 84 ஆயிரம் மாதிரிகள் சோதிக்கப்பட்ட நிலையில் இதுவரை தமிழகத்தில் 69 லட்சத்து 40 ஆயிரம் பேரிடம் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டதாகவும், இன்று டிஸ்சார்ஜ் முடிந்து வீடு திரும்பியோர் 5406 பேர் எனவும், மொத்தமாக குணமடைந்தோர் சதவீதம் 89.99 எனவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.







