--- --:--:-- --

“ஒர்க் அவுட் ஆனஅருமையான ஐடியா!!” மைதானங்கள், சாலைகள், பேருந்து நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி, மளிகை கடைகள்!!

7b72b100-ac22-420d-bf84-ec350ac9357f

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் காய்கறி, மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உருப்படியான ஐடியா ஒன்றை நடைமுறைப்படுத்தி நெரிசலான இடங்களில் இருந்த மார்க்கெட்டுகள் அனைத்தும் திறந்த வெளி மைதானங்கள், காலியாக கிடக்கும் சாலைகள், பேருந்து நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

 

கொரோனா எனும் கொடிய வைரஸ் ஒட்டு மொத்த உலக மக்களின் வாழ்க்கை முறையையே தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது.இந்திய மக்கள் 21 நாள் ஊரடங்கு என்பதை இதுவரை கேள்விப்பட்டிராத, காணாத, அறிந்திராத ஒன்று. இதனால் அடுத்த 21 நாட்களுக்கு வீட்டில் முடங்கினால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் போய் விடுமோ? என்ற பீதியில் மார்க்கெட்டுகளுக்கு படையெடுத்து காய்கறி, மளிகை சாமான்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தனர்.

 

இப்படி மக்கள் ஒட்டு மொத்தமாக கடை வீதிகளுக்கு படை எடுத்ததால், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வீடுகளுக்குள் தனிமையில் இருங்கள் என்பதற்காக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவின் நோக்கமே சிதைந்து விட்டது எனலாம். இதனால் குறுகலான இடங்களில் இருந்த சந்தைகள் அனைத்தையும் மூட உத்தரவிட வேண்டி வந்தது.

ஆனால், மக்களின் அன்றாட தேவைகளான காய்கறி, மளிகை சாமான்களை கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டுமே? ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புதுமையான ஐடியா ஒன்றை உடனே செயல்படுத்தினார். விஜயவாடா நகரில் மிகப் பெரிய மைதானத்தில் மார்க்கெட்டுகளை அமைக்க ஏற்பாடு செய்து, மக்களும் இடைவெளி விட்டு நின்று, காய்கறி, மளிகை பொருட்களை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

 

இதுவும் நல்ல ஐடியா என தமிழகம் முழுவதுமே நகரங்களில் குறுகலான இடங்களில் உள்ள மார்க்கெட்டுகளை பள்ளி மைதானங்கள், போக்குவரத்து முடக்கப்பட்டதால் காலியாக உள்ள பேருந்து நிலையங்கள், வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகளில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை அமைக்க தீவிர ஏற்பாடுகளை செய்ய, இப்போது விறுவிறுப்பாக வியாபாரம் களைகட்டியுள்ளது.

 

இதனால் காய்கறி, மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. பொதுமக்களும் கொரோனா வைரசின் தீவிரத்தை உணர்ந்து பொது வெளியில் கூட்டம் சேராமல் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வே செய்யும் என்பதற்கு இந்த ஐடியா நல்லதாகவே அமைந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon