--- --:--:-- --

தமிழகத்தில் தணியாத கொரோனா பீதி… தள்ளி போடாலாமா பள்ளி திறக்கும் தேதி? பரிதவிக்கும் அரசு..! படபடக்கும் பெற்றோர் மனசு..!!

jf

மிழகத்தில் கொரோனா தொற்று இன்னமும் கட்டுக்குள் வராத நிலையில், பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டு வருவது, பெற்றோர் மத்தியில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கட்டுப்பாடுகளை குழந்தைகள் பின்பற்றுவது சாத்தியமில்லை என்பதால், இந்த விஷயத்தில் அரசு அவசரப்படக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் தோன்றிய கொரோனா தொற்று, உலக நாடுகளை இன்னமும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் கடந்தாண்டு இறுதித்தேர்வை எதிர்கொள்ளாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

 

“ஆன்லைன் கல்வி முறை”

ஒவ்வொரு ஜூன் மாதத்தில் புதிய கல்வியாண்டு தொடங்குகிறது; ஆனால் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்ததால், மார்ச் 16-ம் தேதி மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள், இன்றுவரை திறக்கப்படவில்லை. 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கான அறிகுறி தென்படாததால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், ஜூன் மாதத்திற்கு பிறகு ஆன்லைன் கல்வி முறைக்கு மாறிவிட்டன. இணையதள வசதியுடன் மொபைல்போன்கள் அல்லது லேப்டாப், கம்ப்யூட்டர் உதவியுடன் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

 

வறுமை பெரும் தடை…

 

ஆனால், இதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அரசு பள்ளி மாணவர்களில் பலர் நடுத்தர, ஏழைக்குழந்தைகள் எனவே, ஆன்லைன் கல்விக்கு அவர்கள் மாறுவதில், வறுமை பெரும் தடையாக உள்ளது. பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்களிடம் இணையவசதி கொண்ட ஸ்மார்ட்போன் இல்லை என்பது பெரும் சிக்கலாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் பொருட்டாக, தமிழக அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் போதிக்கப்பட்டு வருகிறது. எனினும், வகுப்பறையில் பாடம் படிப்பது போன்ற பலனோ, அல்லது புரிதலோ இதில் கிடைப்பதில்லை.

 

ஆன்லைன் வகுப்புகள் பலன் தருகிறதா என்பதை அறிய, அண்மையில் தெலுங்கானா மாநிலத்தில் 33 மாவட்டங்களில் 22,502 பெற்றோர்கள், 30,458 அரசு பள்ளி மாணவர்கள் 9,201 தனியார் பள்ளி மாணவர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் அதிர்ச்சிகரமாக அமைந்திருந்தன. ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் 70% பேர், பள்ளிகளுக்கு சென்று கல்வி கற்பதையே விரும்புவதாக கூறினர்.

மேலும், 90% பேர், தங்களுக்கு இணையவசதியுடன் மொபைல்போன் இல்லை எனவும் கூறினர். 48.9% வீடுகளில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே உள்ளது. 39.6% வீடுகளில் ஆன்லைன் கல்வி கற்க தேவையான ஸ்மார்ட் போனோ, கப்யூட்டரோ, இணையவசதியோ இல்லை. ஸ்மார்ட்போன்கள் உள்ளவர்களில், 58.7% பேருக்கு இணையவசதி இல்லை.ஆன்லைன் வகுப்புகளால் பலன் அடைந்ததாக, 24.7% மட்டுமே கூறினர்.

 

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் மத்தியில் எந்த பலனும் உண்டாகவில்லை; மாணவர்கள் தாமதமாக எழுந்திருப்பது, விளையாடுவது, தூங்குவது, மொபைல்கேம்ஸ், டிவி பார்ப்பது என்று அவர்களிடம் சோம்பேறித்தனத்தையே அதிகரித்திருப்பதாகவும், கல்வி மீதான ஆர்வத்தை மங்கச் செய்திருப்பதாகவும், ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகிறனர்.

 

எனவே, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் மீண்டும் திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மத்தியில் எண்ணம் தோன்ற ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து தொடங்கிவிட்டது; வழிபாட்டு தலங்கள், சுற்றுலா பகுதிகளும் திறக்கப்பட்டுவிட்டன. இன்னும் முழுமையாக திறக்கப்படாதது கல்வி நிறுவனங்களும், திரையரங்குகளும் மட்டும்தான். எனவே, பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்களே எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர். இந்த சூழலில்தான் மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

“கடுமையான விதிமுறை!”

அதன்படி, செப்டம்பர் 21ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம் என்று அனுமதி தரப்பட்டுள்ளது. முதலில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே வகுப்புகள் செயல்பட அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்கென கடுமையான விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். பள்ளியில் 6 அடி தூர சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். சோப்பு போட்டு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.

 

கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வகுப்புக்கு வர அனுமதி இல்லை. பள்ளிகள் செயல்பட தொடங்குவதற்கு முன்னதாக வளாகம் முழுவதையும் சுத்தப்படுத்த வேண்டும் என்று, மத்திய அரசின் அறிவுரைகள் கூறுகின்றன. ஜனவரி மாதம் வரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று இதுவரை கூறிவந்த தமிழக அரசு, மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு பள்ளி திறப்பது பற்றி யோசிக்க தொடங்கி இருக்கிறது.

 

மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனைகளை தொடங்கிவிட்டது. பள்ளிகள் திறப்பு குறித்து நிபுணர் குழு ஆராய்ந்து, தமிழக முதல்வரிடம் அறிக்கை அளிக்கவிருக்கிறது. அத்துடன் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

பள்ளிகளில் ஷிப்ட் முறை!

 

இதில், டிசம்பர் வரை பள்ளிகளைத் திறக்காமல் தள்ளிப் போடலாமா? அல்லது வரும் அக்டோபரில் பள்ளிகளை திறக்கலாமா? பள்ளிகளை திறந்தால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 9 – 12ம் வகுப்பு வரை வகுப்புகளை தொடங்க அரசு யோசித்து வருகிறது. இதற்கான நெறிமுறைகளை கல்வித்துறை தயாரித்து வருகிறது. அதன்படி பள்ளிகளில் ஷிப்ட் முறை, சமூக இடைவெளி விட்டு மாணவர்களை அமரச் செய்வது, மாஸ்க் அணிவதை கட்டாயமாக்குவது போன்றவை அதில் இடம் பெறக்கூடும் என்று தெரிகிறது.

 

அதேநேரம், பள்ளிகளை திறப்பது இன்னொரு தரப்பு பெற்றோரிடம் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால், தமிழகத்தில் கொரொனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை; இப்போதுதான் கிராமங்கள் வரை கொரொனாவின் தாக்கம் உணரப்பட்டு வருகிறது. வீட்டிலேயே சொன்னால் கேட்காத குழந்தைகள், பள்ளிகளில் மாணவர்களுடன் நெருங்கி பழகவும், விளையாடவும் வாய்ப்புள்ளது. இது கொரொனா தொற்று பரவ வழிவகுக்கக்கூடும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தினம் தினம் வீட்டில் நிம்மதியின்றி நரகம் போல் வீட்டில் இருக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் புலம்புகின்றனர். இதனால், பள்ளிகள் திறக்கும் விஷயத்தில் அரசை போலவே, பெற்றோர் மத்தியிலும் இருவிதமான கருத்து நிலவி வருகிறது.

 

கல்வியாளர்கள் கருத்து …?

சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் சிலர் கூறுகையில், பள்ளிகளை திறப்பதில் தவறில்லை; வீட்டில் மன உளைச்சலில் இருக்கும் மாணவ- மாணவியருக்கு இது புத்துணர்வை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரம், கொரோனா அபாயம் தமிழகத்தில் குறையாத நிலையில், பிற மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், இங்குள்ள களச்சூழலை ஆராய வேண்டும்.

 

மாணவர்களை சுயகட்டுப்பாடு, சமூக இடைவெளி கடைபிடிக்கச் செய்வது என்பது எந்தளவில் பலன் தரும் என்பது தெரியவில்லை. எனவே, பள்ளிகளில் சானிடைசர், முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடிக்கும் சூழல் போன்றவற்றை உறுதி செய்த பிறகு, அரசு பள்ளிகளை திறக்க வேண்டும். தினமும் பள்ளிகளுக்கு வரச் சொல்லாமல் ஒருநாள்விட்டுஒருநாள் என குறிப்பிட்ட வகுப்புகளை பிரித்து, ஷிப்ட் முறையில் பாடம் நடத்தலாம். நோயெதிர்ப்பு தரக்கூடிய உணவு வகைகளை பள்ளியில் வழங்க வழிவகை செய்ய வேண்டும்;

 

பள்ளிகளில் உரிய மருந்துகள், நோய்தடுப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். இப்பணிகள் முழுமை அடைந்தால் மட்டுமே பள்ளிகளை திறப்பது பற்றி அரசு முடிவெடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon