செப்டம்பரிலும் ஊரடங்கு நீடிப்பா? கூடுதல் தளர்வுகள் என்ன? இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது!!
கொரோனா ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீடிப்பதா? இ-பாஸ் ரத்து, பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி, தியேட்டர்கள், பெரிய கோயில்கள் திறப்பு உள்ளிட்ட கூடுதலாக என்னென்ன தளர்வுகளை அறிவிப்பது என்பது குறித்த முக்கிய முடிவுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அறிவிக்கிறார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அடுத்தடுத்து 7 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு 5 மாதங்களைக் கடந்து நாளை மறுநாள் முடிவடைய உள்ளது. கொரோனா பரவல் ஆரம்ப கட்டத்தில் முழு ஊரடங்கு போடப்பட்டு பஸ், ரயில், விமானம், தொழிற்சாலைகள், தியேட்டர்கள், மால்கள், கோவில்கள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.
பின்னர் இதில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நாட்டில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே சென்றாலும், பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றே மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கூறிக்கொண்டே வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரம் என்ற விகிதத்திலும், தினசரி உயிரிழப்பு 100 என்ற விலும் பதிவாகி வருகிறது.
இதனால் மற்ற மாநிலங்களில் இ-பாஸ் தேவையில்லை என்றும், பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் மக்களோ பேருந்துகளை இயக்க வேண்டும். இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். கோயில்கள், தியேட்டர்கள், சுற்றுலா இடங்களை திறந்து விட வேண்டும் என கோரிக்கைகளை விடத் தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், நாளை மறுதினத்துடன் ஊரடங்கு முடிவடைய நிலையில் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலையும், பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவினருடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார், இந்த ஆலோசனை முடிவில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் என்னென்ன என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அறிவிப்பை வெளியிட உள்ள நிலையில், அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.







