--- --:--:-- --

பரவும் கொரோனா தொற்று..! சுகாதாரத்துறை அமைச்சர் கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்

2

கொரோனா தொற்று பரவி வருவதால், பொதுமக்கள் அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவைகளை கடைப்பிடிப்பது நல்லது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தும் வரும் நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது அவர் கூறும்போது, தமிழ்நாட்டில் போதுமான அளவில் மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தற்போது பரவும் 19 வைரஸ்களின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியதாகவும், அதில் வீரியம் இல்லாத கொரோனா தொற்றுதான் பரவி வருவதாகக் கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 

இருந்தாலும், பொதுமக்கள் அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவைகளைக் கடைப்பிடிப்பது நல்லது எனத் தெரிவித்த அவர், பெரிய அளவில் பாதிப்புகளுடன் இருப்பவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் (மாஸ்க்) அணிவது நல்லது எனத் தெரிவித்தார்.கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளது குறித்து விளக்கமளித்த அவர், உயிரிழந்தவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோயும், நுரையீரல் பாதிப்பும் இருப்பதாகத் தெரிவித்தார்.

 

மேலும், கொரோனா பரவல் குறித்து யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தினார்.மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், தமிழ்நாட்டில் 38 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் மொத்தமாக 2170 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon