புதுச்சேரியில் எம்எல்ஏவுக்கு கொரோனா எதிரொலி…! சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் இடம் திடீர் மாற்றம்!!
புதுச்சேரியில் எதிர்க் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் இடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 4 அமைச்சர்கள் உள்பட அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த மொத்தம் 18 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்த சோகமும் நடந்துள்ளது. இந்நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் முதன் முறையாக எம்எல்ஏ ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவான ஜெயபாலுக்கு காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது எம்எல்ஏ ஜெயபாலும் பங்கேற்றிருந்தார். இதனால் ஜெயபால் மூலம் மற்ற எம்எல்ஏக்களுக்கும் தொற்று பரவியிருக்குமோ? என்ற பீதியும் நிலவுகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வழக்கமாக நடைபெறும் அரங்கு பூட்டப்பட்டு, வேறு இடத்தில் இன்றைய பேரவை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







