--- --:--:-- --

கருணாநிதி நினைவு தினம் இன்று கடைபிடிப்பு!

download

திராவிட இயக்கத்தின் பெரும் துாணாக விளங்கியவர் கருணாநிதி. தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் ஐந்து முறை அமர்ந்த இவர், எழுத்து, பேச்சு, சினிமா, இலக்கியம் என பலதுறை வித்தகர். இவரது முதல் நினைவு தினம் இன்று (ஆக., 7) கடைபிடிக்கப்படுகிறது.திருவாரூர் மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் 1924 ஜூன் 3ல் கருணாநிதி பிறந்தார்.

 

குக்கிராமத்தில் பிறந்தாலும் தேசிய அரசியலில் சில நேரங்களில் புயல் வீசவும், பல நேரங்களில் அமைதி திரும்பவும் காரணமாக விளங்கும் அளவுக்கு உயர்ந்த நிலையை அடைந்தார். தமிழக அரசியலில் எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி தலைவர், முதல்வர் என அரை நுாற்றாண்டுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். அதிகாலையில் எழுவது, நாளிதழ்கள் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, தலைமை செயலகம் அல்லது அண்ணா அறிவாலயம் செல்வது என காலை முதல் இரவு வரை எப்போதும் ஓய்வில்லாமல் உழைக்கும் பழக்கம் கொண்டவர்.

 

தொண்டர்களை அழைப்பதற்கென்றே ‘உடன்பிறப்பே’ என்ற மந்திரச் சொல்லை உருவாக்கி அதையே தி.மு.க.,வின் அடையாளமாகவும் ஆக்கியவர். ஐந்து முறை முதல்வர் பதவியை அலங்கரித்தவர்.சுயமரியாதை, ஹிந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு என ஏற்றிருந்த கொள்கைகளில் இறுதி மூச்சு வரை நிலைத்திருந்தவர். ‘பராசக்தி, மனோகரா’ என காலத்தால் அழிக்க முடியாத சினிமா காவியங்களை தந்தார்.

 

சிறுவயதிலேயே பகுத்தறிவு சிந்தனை கொண்ட கருணாநிதி தன் மனதில் உதித்ததை நாலு பேருக்கு சொல்ல வேண்டும் என்ற ஆவலில் இரண்டு பக்க நோட்டீஸ் தயாரித்தார். அதற்கு பெயர் ‘முரசொலி’. முரசொலியின் ஆசிரியராக செயல்பட்டு தி.மு.க., பத்திரிகையாக வளர்த்தார். அதில் ‘உடன் பிறப்பே’ என துவங்கி எழுதும் கட்டுரைகளிலும் ‘கரிகாலன் பதில்கள்’ பகுதியிலும் அவரது எழுத்தும், கருத்தும் போட்டி போட்டு கவி நயம் படைக்கும்.

 

தமிழுக்கு அணி சேர்க்கும் ‘குறளோவியம், சங்கத்தமிழ்’ போன்ற எழுத்தோவியங்களையும், ‘தென்பாண்டிச்சிங்கம், பொன்னர் சங்கர்’ போன்ற வரலாற்று தொடர்களையும், ‘வெள்ளிக் கிழமை’ போன்ற சிறுகதைகளையும், ‘சிறையில் பூத்த சின்னச்சின்ன மலர்கள்’ போன்ற சிந்தனை கட்டுரைகளையும் படைத்துள்ளார். இவரது சுயசரிதையான ‘நெஞ்சுக்கு நீதி’யை மூன்று பாகங்களாக சுவைபட எழுதியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon